Tuesday, June 28, 2005

ஒரு தமிழ் திரைப்பட இயக்குனரின் திரையுலக வாழ்க்கை

Iyakaunar-kumaran
குமரன்
தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே பார்த்து வந்தான். கும்பகோணத்தருகில், சிறு கிராமம் ஒன்றில் அகல்கள் மட்டுமே படைப்பதை தொழிலாகக் கொண்டாலும், எதிர்காலத்தில் அவன் கரங்களும் சிந்தனைகளும் உலகம் போற்றும் மாபெறும் படைப்புகளைத் தோற்றுவிக்கும் என்பதில் அசுர நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அவை என்னவென்றும், எத்துறையில் என்றும் அவனுக்குத் தெரியவும் இல்லை, தெரிந்து கொள்ளவும் முயற்சி எடுக்கவில்லை. "உலகம் என் படைப்புகளுக்காக காத்திருக்கட்டும்" என்ற செருக்கான சொற்களை அவன் அடிக்கடி அவனுக்குள் சொல்லிக் கொள்வான். சிறிது காலமாக சினிமாவில் அவனுக்கு ஒரு ஈடுபாடு வந்திருந்தது. சாப்ளின், குரோஸவா, பெர்கமன், ரே போன்றோர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தான். இவர்களது திரைப்படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை திரை உலகுக்குள் வாழ்ந்து வந்தான்.

குமரனின் அகல்கள் கும்பகோணத்தில் மிகப் பிரபலம். கோயில்களில் காணப் பட்ட அனைத்து அகல்களும் குமரன் உருவாக்கியவை. குமரன் தன் அகல்களை செய்ய எந்த அச்சையையும் பயன்படுத்த மாட்டான்;ஆனால் ஒன்றிற்கும் இன்னொன்றிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது இயலாத காரியம். தன் அகல்களுக்கு உயிர் இருப்பதாகவே கருதினான், அதுவும் அவன் தந்தது. அவன் வாழ்க்கையின் சோகமான தருணங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் அவன் செய்த அகல்களை விரல்களால் வருடுவான்;அது அவனுக்கு இனம் புரியாத உணர்வை அளித்தது - ஒருவித நிம்மதி. அவன் ஒரு நாத்திகன் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. குமரனுக்கு இது வேடிக்கையாக இருந்தது, ஏனெனில் அவன் நாத்திகனா ஆத்திகனா என்று அவன் ஒரு போதும் சிந்தித்ததில்லை. பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் பிறகு அவன் அகல்கள் தூக்கி எறியப்படும். அதை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் மனம் கனமாகிவிடும். அந்த உணர்வு அவனுக்கு பிடித்ததில்லை; கோயில்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டான்.

குமரன் தன் இருபத்தி நான்காவது பிறந்த நாளில், சென்னைக்குக் கிளம்பினான். "திரை உலகமே, முக்கிய திருப்புமுனையை நீ நெருங்குகிறாய்" என்று அவனுக்கு சொல்லிக் கொள்ளும் "செருக்கான சொற்கள்" புது வடிவம் பெற்றன. முதல் வருடம் அவன் பல வித்யாசமான வேலைகள் செய்தான், சில சினிமாவுக்கு சம்பந்தமானவை, சில சம்பந்தம் இல்லாதவை - லைட் பாய், ஸ்டுடியோ ஒன்றின் காண்டீனில் சப்ளையர், வெளி வராத திரைப்படம் ஒன்றின் துணை இயக்குனர், ஒரு பெரிய இயக்குனர் நடத்தி வந்த விடுதி ஒன்றின் ரூம் பாய், ஒரு திரை இசைக்குழுவில் தவில் கலைஞன், துணை நடிகன். அந்த நாட்களின் எல்லா இரவுகளையும் சென்னை திரையரங்குகளில் கழித்தான். ஒரு வருடத்திற்கு பிறகு அவனுக்கு இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. எண்பது வயது தயாரிப்பாளர் அவன் கதையை படமாக்க முன் வந்தார், ஒரு நிபந்தனையுடன் - இயக்குனராக அவர் பெயரையும் சேர்க்க வேண்டும். குமரன் முதலில் தயங்கினான். பின்பு, திரைப்படத்தின் இயக்கத்தில் தலையிடாமல் இருந்தால் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்வதாகக் கூறினான். அவன் சிந்தனைகள் படமாக்கப் படுவதை விட வேறொன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. படப்பிடிப்பு துவங்கியது. ஒவ்வொறு காட்சியையும் அணு அணுவாக ரசித்து எடுத்தான். படத்தின் பெயர் "ஒரு நாள்". உலகம் தோன்றிய முதல் நாளில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏற்பட்ட உணர்வுகளையும், நிகழ்வுகளையும், காதலையும், ஆச்சரியங்களையும் உலகம் அழிவதற்கு முந்தைய நாள் இரு காதலர்கள் இடையே ஏற்படும் அனுபவங்களுடன் ஒப்பிடும் கதை. இதுவரை எவனுக்கும் தோன்றிடாத சிந்தனை என்று இறுமாப்பு கொண்டிருந்தான்.

"ஒரு நாள்" வெளிவந்தது. பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. விரசமான திரைப்படம் என்று விமர்சனம் செய்யப் பட்டது. சமுதாயத்தை சீர்குலைக்கும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன். பெருந் திரளாகப் பெண்கள் திரண்டு குமரன் வக்கிர புத்திக்காரன் என முத்திரைக்குத்தினர். தயாரிப்பாளர் தன்னை இயக்குனர் பதவியில் இருந்து விலக்கிக் கொண்டார். அந்த நாட்களில் கூட்டம் அரங்குகளில் அலைமோதின. சர்ச்சைக்குக் காரணம் காதலர்கள் இணையும் கடைசிக் காட்சி. வார்த்தைகள் இல்லாமல் வெறும் உணர்ச்சிகள் மூலம் காம உருவில், உள்ளுணர்வுகளையும், உறவின் ஆழத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்தும் காட்சியை, அவன் அவனது படைப்பாற்றலின் சிறந்த வெளிப்பாடாக கருதினான். அந்த காட்சியின் பின்ணணி இசையாக வந்த "அதரங்கள் இணைய ஆன்மா இணைந்தது..." என்ற பாடலையும் அவனே எழுதி இருந்தான். தயாரிப்பாளரின் வற்புறுத்தலால் அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் செய்யப் பட்டன். குமரனுக்கு அதில் உடன்பாடில்லை. "ஒரு நாள்" இருபது நாட்களைக் காணவில்லை. தவிர்க்க வேண்டிய படம் என்றும், இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியாத திரைப்படம் என்றும் பத்திரிக்கைகளிலும், இணையத் தளங்களிலும் வெளியாயின. அதில் நடித்த கதாநாயகிக்கு அதுவே கடைசிப் படமாக அமைந்தது. கதாநாயகன் அதற்குப் பின் பல கோடிகள் சம்பளமாக வாங்கும் அளவிற்கு வளர்ந்தார். "ஒரு நாள்" சில உலகத் திரைப்பட விழாக்களில் இடம் பெற்றது. குமரன் அவை எதிலும் பங்கு கொள்ளவில்லை. "மனித உணர்வுகளை குமரனைவிட எவரும் இதுவரை அழகாக படமாக்கவில்லை" என்று ஒரு ஃபிரஞ்சு நாளிதழில் பிரசுரமாகியது. குமரனுக்கு அதைப் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

குமரன் அடுத்த படம் எடுப்பதற்கு தயாராக இருந்தான். "இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியாத திரைப்படம்" என்று சொன்னவர்களுக்கு சவுக்கடியாக இருக்க வேண்டும் என்று ஒரு கதையை தன் மனதில் உருவாக்கினான். கடத்தப் பட்ட காதலியை மீட்கும் ஒரு காதலனின் கதை - வெறும் சம்பவங்களைக் கொண்டு இரண்டரை மணிநேரம் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தான். ஒரு புது தயாரிப்பாளர் முன் வந்தார். "தேடல்" துவங்கியது. அவன் கையாண்ட திரைக்கதை முறை திரை உலகிற்கு புதிது என்று அவன் குழுவினர் அவனைப் பாராட்டினர். ஆறு மாதங்கள் அயராது உழைத்தான். ஒரு பாடல் காட்சிக்கு அகல் விளக்குகளிடையே ஒரு நடனம் அமைத்திருந்தான். அகல்கள் ஒவ்வொன்றையும் அவனே செய்தான். அப்பொழுதும் அகல்களை வருடுவதில் ஒருவித நிம்மதி கிடைத்தது. "தேடல்" வெளிவந்தது. காதலன் காதலியை ஒரு காட்சியிலும் தீண்டவில்லை; காதலியும் அப்படியே. தன்னை வக்கிர புத்திக்காரன் என்று சொன்னவர்களுக்கு அவன் தரும் தண்டனையாகக் கருதினான். தேடல் ஓரளவிற்கு ஓடியது. எவரும் வீட்டையோ, சேர்த்து வைத்த சொத்துக்களையோ விற்கும் அளவிற்கு வரவில்லை. விமர்சனங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. சராசரி திரைப்படம் என்றே அதை மதிப்பிட்டிருந்தனர். ஒரு ஆங்கில பத்திரிக்கையில் மட்டும் தேடலின் திரைக்கதை அமைப்பு "The little girl from WhitesVille" என்ற படத்தின் நகல் என்று எழுதி இருந்தனர். அதன் பின் வந்த விமர்சனங்கள் அனைத்துமே அதனைக் குறிப்பிட்டு சராசரிக்கும் கீழ் என்று மதிப்பிட்டனர். "The little girl from WhitesVille" திரைப்படத்தை சிலர் தேடிப் பார்க்கத் துவங்கினர். தேடல் திரையிடப் பட்ட திரை அரங்குகளில் கூட்டம் குறைந்து கொண்டே இருந்தது. குமரனும் The little girl from WhitesVille பார்த்தான். ஆச்சர்யத்துடன் கோபமும் எழுந்தது. அந்த திரைக்கதை அமைப்பின் சொந்தக்காரன் அவனில்லை என்ற எண்ணம் அவனை மிகவும் வாட்டியது. The little girl from WhitesVille படத்தின் பிரமாண்டமும் அவனை பிரமிக்க வைத்தது.

அவன் மனதில் சில நாட்களுக்கு ஒலித்துக் கொண்டிருந்த சொல் - பிரம்மாண்டம். இம்முறை தயாரிப்பாளரைத் தேடுவது எளிதாகவே இருந்தது. சிலருக்கு தேடல் பிடித்திருந்தது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் படம் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வரத் துவங்கின. படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் அதனை வெளியிடவில்லை. குமரனின் பிரமாண்டமான படம் என்று அனைவரும் குறிப்பிடுவது அவனுக்கு ஒரு போதையை ஏற்படுத்தியது. ஒன்றரை வருட உழைப்பின் பின் "அந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு" வெளிவந்தது. இரு நாட்டவருக்கிடையே நடக்கும் போரினை பிரம்மாண்டமாக எடுத்திருந்தான். குமரன் விமர்சனங்களுக்காக காத்திருந்தான். தாமதமாகவே வெளிவந்தது. யதார்த்த மீறல் என்றும் எந்தெந்த காட்சிகள் எப்படத்தில் இருந்து நகல் எடுக்கப் பட்டன என்று ஒரு பட்டியலே வெளியிட்டிருந்தனர். குமரனுக்கு புதிதாக இருந்தது. மரத்தினைப் பூமியில் இருந்து பிளந்து அடிக்கும் கதாநாயகனைக் கொண்ட படத்தில் எதற்காக யதார்த்ததை எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. அது பாரதப் போரின் நவீன ஆக்கம் என்று ஒருவர் புரிந்து கொணடாலும் தனக்கு வெற்றி என்று காத்திருந்தான். அதே சமயம் அவனது சிந்தனைகளை வேறொருவர் அவனுக்கு முன்பே யோசித்துவிட்டார் என்பது அவனது படைப்பாற்றலுக்கு இழுக்காக கருதினான். நூறு நாட்கள் ஓடினாலும் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் அப்படம் இடம் பெறவில்லை.

ஆறு மாதங்களில், யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் குமரனின் அடுத்த திரைப்படம் வெளிவந்தது -"தேசிய நெடுஞ்சாலை - 47". குமரனே அதைத் தயாரித்தும் இருந்தான்.ஒரு நெடுஞ்சாலை ஓரத்தில் ஆட்டிசமினால் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி ஒன்றிருக்கிறது.அந்த நெடுஞ்சாலையில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் மூன்று விபத்துகளை ஒரு சிறுமி காண்கிறாள். அந்த விபத்துகளில் சிக்கி இறந்தவர்கள் யார் என்றும், அவர்களது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை அறிய வேண்டும் என்று ஒரு ஆர்வம் அந்தச் சிறுமிக்கு எழ, அதற்கான விடைகளைத் தேடிச் செல்கிறாள். அந்த மூன்றுமே ஒன்றிற்கொன்று தொடர்புடைய கொலைகள் என்பதை அறிந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடிக்கிறாள் என்பது தான் கதை. பத்திரிக்கைகளாலும் மக்களாலும் பெரிதும் ஆதரிக்கப் பட்டது. புதிய கதை, புதிய அணுகுமுறை என்று போற்றப்பட்டது. குமரன் தன் படைப்பாற்றலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதியிருந்த நேரத்தில், அவன் சற்றும் எதிர்ப்பாராத விதத்தில் அவன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

"தேசிய நெடுஞ்சாலை - 47" திரைப்படத்தில் சித்தரிக்கப் பட்ட மனநிலை பாதிக்கப் பட்டோருக்கான பள்ளியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவராகக் காட்டி இருக்கின்றனர். இது அந்த ஜாதியை சேர்ந்தோரை இழிவு படுத்துவது போல் உள்ளது. மேலும், இதை அறிவியல் ரீதியாக பார்த்தால், அந்த ஜாதியில் பிறக்கும் குழந்தைகள் இது போல் மன நிலை பாதிக்கப் படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என்பது போல் மறைமுகமாக சொல்லி உள்ளனர்.இது நாளடைவில் அவர்களது சமூகத்தையே சுவடுகளின்றி அழித்துவிடுவதற்கான பயங்கர முயற்சி".

திரைப்படத்திற்கு தடை விதிக்கப் பட்டது. குமரன் முதல் முறையாக வலி என்பதை உணர்ந்தான். படைப்பாளி என்ற அவன் கர்வத்தை உடைத்தது போல் இருந்தது. பித்துப் பிடித்தவன் போல் திரிந்தான். அந்த ஆட்டிசப் பள்ளி சித்தரிக்கப்பட்டதல்ல, உண்மையென்று சொல்லக் கூட அவன் சுயநினைவில் இல்லை. கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்கள், அந்த ஜாதிக்காரர்கள் மிரட்டினார்கள்.

என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த பொழுது, அகல்கள் அவன் நினைவுக்கு வந்தன. அன்று மாலையே அவன் கிராமத்திற்குக் கிளம்பினான்.அவன் படைக்கும் அகல்கள் எதற்காகப் படைக்கப் படுகின்றனவோ அதற்காக மட்டும் பார்க்கப் படும், வருணிக்கப் படும், ரசிக்கப் படும் என்ற எண்ணம் ஒரு பெரிய ஆறுதலை அளித்தது. அவனது வீட்டை அடைந்தவுடனே அவன் படைக்கும் தொழிலை துவங்கிவிட்டான். நூற்றுக்கணக்கில் அகல்கள் செய்து அடுக்கினான். விரல்கள் சோர்வடைந்த பொழுது மெதுவாக அகல்களை வருடினான், இம்முறை கிடைத்த நிம்மதிக்கு அளவே இல்லை."நான் படைப்பாளி" என்று ஒருமுறை சொல்லிக் கொண்டான்.

23 Comments:

At 12:27 PM, Blogger vin said...

Tremendous and touching. I am proud...!!!

 
At 1:01 PM, Blogger Badri Seshadri said...

மிகவும் பிடித்திருந்தது. முதலில் படிக்கும்போது ஒரு கதை என்று தோன்றவில்லை! இந்தப் பெயரில் ஏதேனும் படங்கள் வந்ததா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்!

 
At 2:28 PM, Blogger Vijayakumar said...

சஞ்சீத், புதுபாணியில் அருமையான கதை. ரசித்தேன்.

 
At 2:30 PM, Blogger Sundar said...

அண்மையில் நான் படித்தவைகளில் மிகச்சிறந்த சிறுகதை. மிக அருமை.

 
At 2:53 PM, Blogger Shankar said...

excellent stuff. maan, hats off.

 
At 2:59 PM, Blogger மஞ்சூர் ராசா said...

சஞ்சீத், அருமையான சிறுகதை. இதை அனைவரும் படிக்கவேண்டும், படைப்பாளிக்கு எது ஆறுதல் என புரியவேண்டும். இந்த சிறுகதையை அன்புடன் குழுமத்தில் இட்டுள்ளேன். நன்றியும் நவின்றுள்ளேன். அனைவரும் படிக்கட்டும். வாழ்த்துக்கள்
anbudan@googlegroups.com

 
At 3:31 PM, Blogger பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்டவர்கள் இதை சிறுகதையாகவே முடிவு செய்து விட்ட காரணம் தெரியவில்லை. :-))

எந்தவொரு சிறந்த படைப்பாளியாக இருந்தாலும், அவனுடைய படைப்புகளின் சிறப்புகளை கருத்தில் கொள்ளாமல், ஜாதி, மதம், இனம் என்கிற குறுகிய நோக்கோடு அந்தப் படைப்பை மற்றும் படைப்பாளியை கொச்சைப்படுத்துவது நம்மவர்கள் காலங்காலமாக செய்துவரும் விஷயம். இப்போது இணையத்திலும் அதைப் பொருத்திப் பார்க்கலாம். இதைத்தான் இநதப்பதிவு குறிப்பிடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

 
At 5:42 PM, Blogger NONO said...

அருமையாக இருக்கின்றது...!!!தொடருங்கள்!!!!!!

 
At 6:44 PM, Blogger sanjeeth said...

அனைவர் அளித்த உற்சாகத்துக்கும் மிக்க ந்ன்றி, மிக்க மகிழ்ச்சி.
ஷங்கர்,
இதனை ஒரு சிறுகதையாக மட்டுமே பார்க்க விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிடுவது போல் இணையத்தில் பல விமர்சனங்கள் இடம் பெறுகின்றன. ஆனால் அவற்றை சுட்டிக் காட்டுவது இப்பதிவின் நோக்கம் இல்லை. அப்படி செய்வதாக இருதால் அந்த
NH-47 கதையினையோ , அகல்களையோ யோசித்திருக்க மாட்டேன். இது ஒரு கதை, with a touch of reality :).

 
At 9:14 PM, Anonymous Anonymous said...

Excellent Work Sanjeeth. You have put in a lot of thought and effort.
"காதலன் காதலியை ஒரு காட்சியிலும் தீண்டவில்லை; காதலியும் அப்படியே. தன்னை வக்கிர புத்திக்காரன் என்று சொன்னவர்களுக்கு அவன் தரும் தண்டனையாகக் கருதினான்"
Nalla Nakkal. Liked the titles of the movies too. NH-47 story was super. Romba impress aagiten. Ennamo po..
-Sudharshan

 
At 1:50 AM, Anonymous Anonymous said...

A beautiful and crisp piece of work, though I could not think of it as a short story because reality prevails throughout the narration. Yet,there is a mystic attraction that hints the presence of some fiction.

Keep it up Sanjeeth.

 
At 6:21 AM, Anonymous Anonymous said...

Just Great!
Your Entire Story hinges on
"அகல்கள் எதற்காகப் படைக்கப் படுகின்றனவோ அதற்காக மட்டும் பார்க்கப் படும், வருணிக்கப் படும், ரசிக்கப் படும் என்ற எண்ணம் ஒரு பெரிய ஆறுதலை அளித்தது".
But the way you have went about explaining Kumaran and his works has built an aura around him. I liked the subtelitites like
"அதில் நடித்த கதாநாயகிக்கு அதுவே கடைசிப் படமாக அமைந்தது."

"ஒரு நாள்" சில உலகத் திரைப்பட விழாக்களில் இடம் பெற்றது. "

" குமரனின் பிரமாண்டமான படம் என்று அனைவரும் குறிப்பிடுவது அவனுக்கு ஒரு போதையை ஏற்படுத்தியது"

Nice to see so many people appreciating your work. It would be great if more people can read this work. Try to get this published somewhere. Can you please send me a mail?

 
At 9:12 AM, Blogger NS said...

Indha blog-la English comment podarathukku manasu varala... But Madras tamil compare pannina, English is better:D

Awesome effort! Loved the story, and each story within as well... Do keep writing..:)

 
At 10:47 AM, Blogger sanjeeth said...

@Sudharshan,
என் பள்ளி நண்பன் சுதாவா இது? What a way to meet! எப்போ Sir தமிழ் படிக்க கத்துக்கிட்டீங்க? ;)

@anonymous:
I think you forgot to login.mail அனுப்ப சொல்லிவிட்டு mail id கொடுக்கவில்லையே :(. Anyway please drop in a mail at sanjeeth AT gmail DOT com. I will reply. Thanks for the comments and for noting those subtelities.

@priya
>>mystic attraction
Double Thanks! :)

@Nithya
Iam a major fan of madras Thamizh! அதுவும் தமிழ் தானே :)

 
At 12:49 PM, Blogger vin said...

உண்மைதான். இன்று நம் போன்ற மெத்தப் படித்தவர்கள் பேசும் ஆங்கிலத்தமிழைக் காட்டிலும் சென்னைத் தமிழ் செந்தமிழாகத் தான் தோன்றுகிறது :-)

back to the blog,
அகல் விளக்கு நெஞ்சை விட்டு இன்னமும் அகலாத விளக்கு!!!

மறுமுறை வாழ்த்துகள்...

-Vinodh
http://visai.blogspot.com

 
At 7:15 PM, Anonymous Anonymous said...

Good Flow! Oru kathai il moonru padam:)...padam kaatra po

 
At 6:33 AM, Anonymous Anonymous said...

படிக்கும் பொழுது துக்கம் தொண்டையை அடைப்பது போல் ஒரு உணர்வு. அழகாக எழுதுகுறீர். தொடர்ந்து எழுதுங்கள்

 
At 9:38 AM, Blogger rajkumar said...

இதே போன்ற சம்பவம் நிஜ வாழக்கையில் நடைபெற்றுள்ளது.

எங்கேயோ கேட்ட குரல் படத்தில் தங்கவேளு ஆசாரி ஏமாற்றி விட்டார் என்ற வசனத்திற்கு, மதுரையில் ஆசாரிகள் சங்கம் வழக்கு தொடுக்க, படத்திற்கு தடை விதித்து விட்டார்கள்.

 
At 9:24 PM, Blogger டண்டணக்கா said...

உங்களின் இயல்பான் எழுத்து நடை மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.
-டண்டணக்கா

 
At 11:19 AM, Blogger துளசி கோபால் said...

அருமை!!!! வாழ்த்துக்கள்!!!

நல்லா இருங்க!!!

என்றும் அன்புடன்,
துளசி.

 
At 5:52 AM, Blogger சினேகிதி said...

நல்லா எழுதியிருக்கிறீர்கள்.

 
At 2:34 PM, Anonymous Anonymous said...

Good Story. It reveals pain of true artist.

-Bala

 
At 2:34 PM, Anonymous Anonymous said...

Good Story. It reveals pain of true artist.

-Bala

 

Post a Comment

<< Home

Powered by Blogger