Thursday, September 22, 2005

பஞ்சு மிட்டாய்

PanjuMittai


அக்டோபர் 23, 2007

நகரம் எங்கும் விரோனின் படங்கள். சுதந்திரத் திடல் ஒரு கருப்புக் கடலாகக் காட்சி அளித்தது. விரோன், எப்பொழுதும் அணிந்த அந்த கருப்பு சட்டையும் திருப்பி அணியப் பட்ட கருப்புத் தொப்பியும் திரும்பும் இடமெங்கும் காணப்பட்டது. திடலின் நடுவில் செர்கன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். அவன் இடது கையை மெதுவாக உயர்த்த, ஆரவாரம் மெதுவாக குறைந்து ஒரு நிசப்தம் நிலவியது. "தோழர்களே! இன்று எழுச்சி நாள்! ஒரு ஒடுக்கப் பட்ட சமூகம் தன் திரைகளைக் கிழித்து எழுச்சியுடன் எழுந்து நிற்க வித்திட்ட நாள். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் சுவையை இரண்டு வருடங்கள் முன்பே கோபத்துடனும், ஒரு வைராக்கியத்துடனும் உணரச் செய்து விரோன் வீர மரணம் அடைந்த நாள். அவரது எழுத்துக்களை இன்று நினைவு கொள்கிறேன்". அவரது குரல் தடுமாறியது.

பயத்தினை நின்று புதைப்போம்;
அதனுடன் நம்மை மிதித்த வெருளிகளையும்!
.......
உணர்வுகள், உடைமைகள், உயிர்கள் தொலைத்தாயிற்று,
மிச்சமிருப்பது இந்த வேட்கை மட்டும் தான்!
.......


அக்டோபர் 23,2005

மெதுவாக என் கண்கள் இருட்டிற்கு பழகிக் கொண்டிருந்தன. பின்னிருந்து துப்பாக்கி முனையால் என்னையும் லார்ஸிக்கையும் முன் தள்ளிக் கொண்டிருந்த உருவங்கள் ஓரளவிற்கு கண்ணுக்குத் தெரியத் தொடங்கின - ஒருவன் பருமனாக இருந்தான், இன்னொருவனிடம் நினைவு கோர ஒரு சிறப்பு அம்சமும் இல்லை; என்னைப் போல தொப்பியை திருப்பி அணிந்திருந்ததைத் தவிர. கண்டிப்பாக இவை எங்களது வாழ்வின் இறுதித் தருணங்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். ஏற்கனவே இரு முறை மரணத்தின் பிடியில் இருந்து தப்பி இருந்தாலும், இம்முறை அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. லார்ஸிக் உடம்பில் இருந்து அதிகமாக இரத்தம் கசிந்து விட்டது. தள்ளாடி நடந்துக் கொண்டிருந்தான். அவனைக் கொல்ல அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. அப்படியே விட்டு விட்டால் போதும், அதிக பட்சம் இரண்டு மணிநேரம் உயிருடன் இருப்பான்.

எப்படிப் பட்ட மாவீரன். நினைத்துப் பார்க்க வருத்தமாக இருந்தது. என்னை அவன் "கேப்" என்று தான் அழைப்பான், கேப்டன் என்பதன் சுருக்கம். நான் அவனை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். என்னைப் பார்த்து சிரித்தான். "என்ன கேப் , பயமாக இருக்கிறதா?" என்று கண்ணடித்தான். நான் மௌனமாக இருந்தேன்."எனக்கும் தான்" என்றான். நான் அதனை எதிர்பார்க்கவில்லை.

என்னை கண்டிப்பாக கொன்று விடுவார்கள். எப்படி என்பது மட்டும் தான் நிச்சயமில்லை, அவர்கள் என் மேல் கொண்ட வெறுப்புக்கு இணங்க இருக்கும். பின்பு வழக்கம் போல், வெள்ளைச் சவப் பெட்டியில் என் இராணுவ முகாமிற்கு அனுப்பி வைப்பார்கள். தலைவன் என்பதால் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் படும், வலது கையற்ற என் சவம்; எல்லா வசீகரமும் இழந்து, இரத்தக் கறையோடும், காயங்களோடும் என் முதல் தோல்வியின் சின்னமாக என் சவம்.

எனது வலது தோள் பட்டையை தடவிப் பார்த்துக் கொண்டேன். தசைகள் தொங்கிக் கொண்டிருந்தன. நுனிகளில் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. இல்லாத கட்டை விரல் வலிப்பது போன்ற உணர்வு. "Bulls' Eye" ஷெல் துளைத்து வயலோரம் எங்கோ கிடக்கிறது என் கை. குறி வைத்தவன் திறமை வாய்ந்தவனாக இருந்திருக்க வேண்டும். என் சிந்தனை ஓட்டத்தை தடை செய்வது போல் எங்களை இடது புறம் திரும்பச் சொல்லித் தள்ளினார்கள். திரும்பியவுடன் அவ்விடம், போர்க் கைதிகளுக்கான பிரத்யேகச் சிறை என்று புரிந்தது. வரிசையாக வலது புறம் அறைகள். ஒவ்வொறு அறையிலும் ஒரு கைதி, பரிச்சயமான முகம். அவ்வரிசையின் கடைசி அறை காலியாக இருந்தது. அங்கே என்னை அடைத்தார்கள். "இந்த அரை பிணத்தை என்ன செய்வது?" என்று பருமனானவன் லார்ஸிக்கைப் கைக்காட்டிக் கேட்டான். "அவனை முதல் அறையில் அந்த கவிஞனுடன் சேர்த்து அடைத்து வை. அவனது கவிதைகள் கேட்டே மீதி உயிரும் போய்விடும்" என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவனை இழுத்து சென்றனர். இவர்கள் எங்களை வைத்து பல்லாங்குழி ஆடுவது போல் எனக்குத் தோன்றியது - நாங்கள் காய்கள், அறைகள் குழிகள். இந்த சிந்தனையை இன்னும் ஓடவிட்டேன்.

கணிதத்தில் பயின்ற "Pigeon Hole Theorem" நினைவுக்கு வந்தது. எத்தனை எளிதான தேற்றம்! ச்ச.. இது என்ன இறக்கும் பொழுது சம்பந்தமற்ற சிந்தனைகள். நான் சுயநினைவிழந்து விட்டேனா? என்னை பயம் ஆட்கொண்டு விட்டதா? மரணம் அனைவரையும் இந்நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறதோ? லார்ஸிக்கும் பிடிபடும் பொழுது சம்பந்தமில்லாமல் - "கேப்! எத்தனை அழகிய மண்வாசனை! What beautiful sunset!" என்றான்.

கண்ணை மூடிக் கொண்டு Joseph Blanco White எழுதிய Mysterious Night கவிதை வரிகளை என் மனதில் உலவ விட்டேன்.
Why do we then shun Death with anxious strife?
If Light can thus deceive, wherefore not Life?

இருள் மெதுவோக என்னை மறுபடி கவ்விக் கொண்டது.

என் இடது கைவிரல்கள் மெதுவாக என்னை அறியாமலேயே, என்னையே உணர்ந்து கொண்டிருந்தது. என் கண்ணருகே இருந்த தழும்பின் மேடு பள்ளங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது அதனை உணர்ந்தேன். அந்த தழும்பிற்கு பதினெட்டு வயதிருக்கும். எனது பத்தாவது வயது; பள்ளியிலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். அந்த ஒரு மைல் தூர நேர் பாதையை அடைந்த பொழுது அதிசயமாக எவரும் சாலையில் இல்லை. அன்றே செய்து விட வேண்டும் என்று, மெதுவாக இரு கைகளையும் பிடியில் இருந்து எடுத்தேன். சைக்கில் ஆடத் துவங்கியது. சட்டென மறுபடி கைப்பிடியைப் பிடித்து நிதானப் படுத்திக் கொண்டேன். சில நொடிகள் கழித்து, மறுபடி கைப்பிடியை விட்டேன். சைக்கிள் நிலை குலைந்து ஆடத் துவங்கியது. என்னை பயம் பற்றிக் கொண்டது. ப்ரேக்கை அழுத்தி நிறுத்தினேன். எனக்கு உடல் முழுக்க வியர்த்து விட்டது. சிறிது நேரம் என்னை நிதானப் படுத்திக் கொண்டேன். ஆனால் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் என் மனதைப் பற்றிக் கொண்டது. சைக்கிளை செலுத்தினேன், இம்முறை சற்று வேகமாக. மெதுவாக கைகளைக் கைப்பிடியில் இருந்து விலக்கினேன். அப்பொழுது மெல்லிய காற்று வீசத் துவங்கியது. அதன் மெல்லிய ஸ்பரிசத்தில் லயித்தேன். ஐந்து விநாடிகள் மெய் மறந்தேன். கைகள் காற்றில் இருந்ததையும் மறந்தேன். அதை உணர்ந்த நொடி என் ஆனந்தத்திற்கு அளவில்லை. கைகளை நன்றாக பரப்பி அந்த வெற்றியைக் கொண்டாடினேன்.

15...20..25 நொடிகள். சாலையின் முடிவு வந்து விட்டது. இன்னும் கைகள் கைப்பிடியில் இல்லை. தீடீரென ஒரு ஆட்டிக்குட்டி சாலையைக் கடந்து ஓடியது. நான் அவசரமாக ப்ரேக்கை அழுத்த நான் நிலையிழந்து விழுந்தேன். கைப்பிடி ஓரம் என் கண்ணருகே குத்திவிட்டது. வெற்றியின் களிப்பு வலியை மறக்கச் செய்தது.அந்த தழும்புடன் அந்த நாளின் நினைவுகள் என்னுடனே தங்கி விட்டது. அந்த நாள் எனக்காவே புலர்ந்தது போல் இருந்தது - யாரும் இல்லாத சாலை, பயத்தை மறக்க வீசிய அந்தக் காற்று!

"பயத்தை நின்று புதைத்தேன்!"

என் விரல் என் உதடுகள் மேல் இருந்த மெல்லிய கோட்டில் பயனம் செய்து கொண்டிருந்தது. என் வசீகரத்தை எனக்கு உணர்த்திய கோடு. ஏழு வருடங்கள் முன்பு என் முகத்தில் வரையப் பட்ட கோடு. அன்று மூவாயிரம் மாணவர்கள் எனக்கு வாக்களித்து தலைவனாக்கியிருந்தனர். அத்தனை தோள்களும் என்னை சுமக்க ஆசைக் கொண்டிருந்தன. இதற்கிடையிலும் அன்று என்னை வெறுத்தவர்களும் இருக்கத் தான் செய்தார்கள். என்னைக் கொண்டாடிய எவனோ ஒருவன் தோளில் உட்கார்ந்திருந்த பொழுது, வேகமாக ஒரு கல் வந்து என் உதட்டின் மேல் உள்ள தோலைக் கிழித்தது. இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வெற்றி ஒரு போதை. வலி போன்ற உணர்வுகளை மறக்கச் செய்யும். I was a mad man, drugged by the limelight. Yes, drugged. வெறி பிடித்தவன் போல் அவனை துரத்தினேன். என் பின் மூவாயிரம் மாணவர்கள், இல்லை என் விரல் அசைவிற்காக காத்திருந்த தொண்டர்கள். சிறிய கலவரம், கல் எறிந்தவன் கண்ணீர் வழிய கை கூப்பி மன்னிப்புக் கேட்டான். கேன்டீன் நாசமாக்கப் பட்டது, சில வகுப்புகளின் இருக்கைகள் சேதம் அடைந்தன. எல்லாம் எனக்காக, மாணவர் தலைவன் விரோனுக்காக.
"அதனுடன் என்னை மிதித்த வெருளிகளையும்!"

இன்று யோசித்துப் பார்த்தால் எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது. அன்று துவங்கி இன்று வரை ஒரு வெறி பிடித்தவனாகவே வாழ்ந்திருக்கிறேன். அந்த ஒரு நாள் இல்லாமல் இருந்திருந்தால்? அர்த்தமற்ற வெறி! சில நொடிகள் என் மனம் நிசப்தமாக இருந்த்து. ஆனால் பாரமாக இருந்தது.

முட்டாள்! அன்று இல்லை என்றால் வேறொரு நாள். நீ இதற்காகப் பிறந்தவன். You were destined to do these. உன் வெறி ஒரு கொள்கைக்காக. நியாமானதே. எனக்கு மண்டை வெடிப்பது போல் இருந்தது. கொள்கை, விதி - எல்லாம் சப்பைக் கட்டுகள்! எல்லாமே அர்த்தமற்றவை. நான் எனக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். என் உயிர் அந்த நொடி முடிந்து விட வேண்டும். "என்னை சீக்கிரம் கொல்லுங்கள்!"

மறுபடி இருள். நான் என்னை சாந்தப் படுத்திக் கொள்ள முயற்சித்தேன். நிதானமாக யோசித்தேன். என் இருபத்தெட்டு வருட வாழ்க்கையின் வேர்களை இந்த நிமிடங்களின் சிந்தனைகள் அறுத்தெரிந்து கொண்டிருந்தன. ஏன் இந்த சிந்தனைகள்? என்னை வேகமாக அணுகும் மரணத்தினாலா? ஆம், என் இயலாமையை ஒப்புக்கொள்ளும் விதமாக இந்த சிந்தனைகள், உளறல்கள். ஆம் மரண பயத்தின் வெளிப்பாடுகள். அவ்வளவே!

சிறிது நேரமே என் மனம் அமைதியாக இருந்தது. மறுமுறை எனக்குள் அந்த விவாதம் துவங்கிவிட்டது.

மரண பயம்? பொய், எல்லாம் பொய். இதனை இன்று தான் யோசிக்கிறாயா? இதனை இதற்கு முன் எத்தனை முறை சிந்தித்திருக்கிறாய் - தூக்கம் இல்லாமல் நட்சத்திரங்களைப் எண்ணிக் கொண்டு, தன்னந்தனியாக ஆற்றங்கரையில் கற்கள் எறிந்து கொண்டு, அந்த சிறுவர்களுடன் க்ரிக்கெட் விளையாடிக் கொண்டு, எத்தனை முறை! அப்பொழுதெல்லாம் எங்கிருந்தது மரண பயம்?

வாயை மூடு!

அந்த நாள் அந்த சாலை காலியாக இல்லாமல் இருந்திருந்தால்? அந்த காற்று வீசாமல் இருந்திருந்தால்?

முந்தானை பிடித்துக் கொண்டு அம்மாவின் பின் பயந்து ஒளியும் மூக்கொழுகும் சிறுவனாக இருந்திருப்பேன். அப்படி இருக்க நான் விரும்பவில்லை.

இன்றைய உனக்கும் அந்த மூக்கொழுகும் சிறுவனுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. நீ யார்? ஒரு சுவரொட்டி! ஒரு post card! உன் படம் உள்ள அஞ்சல் அட்டைகளை கரப்பான்பூச்சிகள் வாழும் பெட்டிகளில் சேர்த்து வைப்பார்கள்! அவ்வளவே!

Oh! Stop it! Give me my Gun!

பல வருடங்கள் பின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது! உலகமே என்னை கைவிட்டது போல் இருந்தது. "Post Card"! என்னை ரேயோன் வர்ணித்த அதே வார்த்தைகள்! ரேயோன் - எத்தனை அழகான பெண். என் வாழ்க்கையின் சிறந்த கணங்கள் என்றால், அவளுடன் இருந்த முதல் ஐந்து நாட்களை தான் சொல்வேன். ஆறாவது நாளை மறக்க விரும்பினேன். மறக்க விரும்பினாலும் அந்த நாள் நினைவுகள் எத்தனை முறை என்னை பாடாய் பட்டித்தின.

"விரோன்...நேற்று உன் டைரியைப் படித்தேன்."

"என்ன! என் டைரியை என்னைக் கேட்காமல் படித்தாயா? ரே, இது அநாகரிகம் இல்லை? உன்னிடம் இதனை எதிர்பார்க்கவில்லை"

"நடிக்காதே. நான் அதனை படிக்க வேண்டும் என்று தான் நேற்றிரவு என் அறையில் விட்டுச் சென்றாய். உண்மை தானே?"

நான் மௌனமாக இருந்தேன். உண்மைதான்.

"So, நீ ஒரு புரட்சிக்காரன்?"

"ஆம். இந்த நாட்டினை ஒரு புதிய பாதையில் நடத்திச் செல்லப் பிறந்தவன்", என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டில் இருந்து பிஸ்டலை எடுத்து சுற்றினேன்.

"இதைத் தான் இத்தனை நேரம் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தாயா?"

"ஆமாம்"

"ம்ம்ம்.."

"எதற்கிந்த ம்ம்? உனக்கு உடன்பாடில்லை என்று தோன்றுகிறது"

"நான் அப்படி சொல்லவில்லை"

"பின் எப்படி?" கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

"எப்படியும் இல்லை விரோன்! சரி கேள். நீ உன் வாழ்க்கையை பயந்து வாழுகிறாய்"

"பயத்துடன்? நானா?", சிரித்தேன்.

"சரி, பயம் என்பது அதிக பட்ச வார்த்தை. ஆனாலும் பயமும் இருக்கிறது. இப்பொழுதே பார், உன் வலது கையில் பஞ்சு மிட்டாய் அப்படியே இருக்கிறது. என் கையில் இருப்பதை பார், குச்சி பட்டுமே; என்னால் என் பஞ்சு மிட்டாயை முழுவதுமாக ரசிக்க முடிந்தது. நீ பஞ்சு மிட்டாயை விட இடது கையில் உள்ள துப்பாக்கியை இறுகப் பிடித்திருக்கிறாய்."

"புரட்சியைவிட உனக்கு இந்த அற்ப பஞ்சு மிட்டாய் பெரிதாகத் தோன்றுகிறது?"

"விரோன் நான் சொல்வது உனக்கு புரியவில்லை. உனக்கு நான் சொல்வது பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் இதனை நீ கேட்டே ஆக வேண்டும். நீ உன் வாழ்க்கையை அவசரமாக வாழுகிறாய். அனைத்திலும் அவசரம். இன்று, நேற்றிரவு, எப்பொழுதும். நீ ஒரு பெரிய சுமையுடன் அலைகிறாய். "

"சிலவற்றைப் பெற சிலவற்றை இழக்கத் தான் நேரிடுகிறது. வெற்றி பெற்ற பின் இந்த கஷ்டங்களின் பலன் இன்னும் சுவையாக இருக்கும். I would be an hero !"

"Hero? நாளை நீ ஒரு அர்த்தமற்ற போஸ்ட் கார்ட். உனக்கு இது நன்றாகவே தெரியும். உன் பயம், அவசரம் எல்லாமே அதனால் தான். நான் சொல்வது மிகவும் சாதாரண விஷயம் - உன் வலது கையில் உள்ள பஞ்சு மிட்டாய், இல்லை இடது கையில் உள்ள துப்பாக்கி. நீ இரண்டில் ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும்"

"விரோன்...நேற்று உன் டைரியைப் படித்தேன்."

"என்ன! என் டைரியை என்னைக் கேட்காமல் படித்தாயா? ரே, இது அநாகரிகம் இல்லை? உன்னிடம் இதனை எதிர்பார்க்கவில்லை"

"நடிக்காதே. நான் அதனை படிக்க வேண்டும் என்று தான் நேற்றிரவு என் அறையில் விட்டுச் சென்றாய். உண்மை தானே?"

நான் மௌனமாக இருந்தேன். உண்மைதான்.

"So, நீ ஒரு புரட்சிக்காரன்?"

"ஆம். இந்த நாட்டினை ஒரு புதிய பாதையில் நடத்திச் செல்லப் பிறந்தவன்", என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டில் இருந்து பிஸ்டலை எடுத்து சுற்றினேன்.

"இதைத் தான் இத்தனை நேரம் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தாயா?"

"ஆமாம்"

"ம்ம்ம்.."

"எதற்கிந்த ம்ம்? உனக்கு உடன்பாடில்லை என்று தோன்றுகிறது"

"நான் அப்படி சொல்லவில்லை"

"பின் எப்படி?" கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

"எப்படியும் இல்லை விரோன்! சரி கேள். நீ உன் வாழ்க்கையை பயந்து வாழுகிறாய்"

"பயத்துடன்? நானா?", சிரித்தேன்.

"சரி, பயம் என்பது அதிக பட்ச வார்த்தை. ஆனாலும் பயமும் இருக்கிறது. இப்பொழுதே பார், உன் வலது கையில் பஞ்சு மிட்டாய் அப்படியே இருக்கிறது. என் கையில் இருப்பதை பார், குச்சி பட்டுமே; என்னால் என் பஞ்சு மிட்டாயை முழுவதுமாக ரசிக்க முடிந்தது. நீ பஞ்சு மிட்டாயை விட இடது கையில் உள்ள துப்பாக்கியை இறுகப் பிடித்திருக்கிறாய்."

"புரட்சியைவிட உனக்கு இந்த அற்ப பஞ்சு மிட்டாய் பெரிதாகத் தோன்றுகிறது?"

"விரோன் நான் சொல்வது உனக்கு புரியவில்லை. உனக்கு நான் சொல்வது பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் இதனை நீ கேட்டே ஆக வேண்டும். நீ உன் வாழ்க்கையை அவசரமாக வாழுகிறாய். அனைத்திலும் அவசரம். இன்று, நேற்றிரவு, எப்பொழுதும். நீ ஒரு பெரிய சுமையுடன் அலைகிறாய். "

"சிலவற்றைப் பெற சிலவற்றை இழக்கத் தான் நேரிடுகிறது. வெற்றி பெற்ற பின் இந்த கஷ்டங்களின் பலன் இன்னும் சுவையாக இருக்கும். I would be an hero !"

"Hero? நாளை நீ ஒரு அர்த்தமற்ற போஸ்ட் கார்ட். உனக்கு இது நன்றாகவே தெரியும். உன் பயம், அவசரம் எல்லாமே அதனால் தான். நான் சொல்வது மிகவும் சாதாரண விஷயம் - உன் வலது கையில் உள்ள பஞ்சு மிட்டாய், இல்லை இடது கையில் உள்ள துப்பாக்கி. நீ இரண்டில் ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும்"

நான் கோபமாக பஞ்சு மிட்டாயை தரையில் எறிந்தேன். நான் இதனைத் தான் விரும்புகிறேன் என்பது போல் பிஸ்டலை என் விரலில் சுற்றிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினேன். ரேயோனைக் கடைசியாகப் பார்த்த நாள் அது தான்.
"மிச்சமிருப்பது உன் பற்களின் சுவடுகள், கலந்த வேர்வை வாசம், சில கிழிந்த ஆடைகள்"
நான் என் வலது தோள்பட்டையை தடவிப் பார்த்தேன், பற்களின் சுவடுகள் பதிந்த இடமும் என்னுடன் இல்லை. இன்னும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

என் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நான் கேட்கும் கடைசி ஒலிகள். ஃப்லாஷ் லைட் ஏந்திக் கொண்டு இருவர் வந்தனர்.

ஒருவன் "The honour is yours" என்றான். மற்றொருவன், பொறுமையாக துப்பாக்கியை நெற்றியில் வைத்தான். நான் கண்களை மூடிக் கொண்டேன். வரிசையாக பல பிம்பங்கள் வந்து மறைந்தன - சைக்கிள், என்னைத் தாக்கிய கல், என் முதல் துப்பாக்கி, அம்மா, லார்ஸிக், நண்பன் செர்கன், என் க்ரிக்கெட் மட்டை, ரேயோன், நான் கொன்ற முதல் மனிதன், மறுபடி ரேயோன், என் படம் கொண்ட ஒரு போஸ்ட் கார்ட், என் தொப்பி, கடைசியாய் நான் தூக்கி எறிந்த அந்த பஞ்சு மிட்டாய். என்னை இருள் நிரந்தரமாக சூழ்ந்துக் கொண்டது.

13 Comments:

At 10:15 AM, Blogger -/பெயரிலி. said...

கதை அமைக்கப்பட்ட விதம் பிடித்திருக்கின்றது.

(ஆனால், கதையின் கரு இதுவாக இருப்பது தமிழிலே இதுவல்ல முதன்முறை)

 
At 1:59 PM, Blogger Sundar said...

எனக்கென்னவோ கதையைப் படித்து முடித்தவுடன் நினைவில் மேலோங்கி நின்ற சொல் "போஸ்ட்கார்டு" தான், "பஞ்சுமிட்டாய்" அல்ல.

ஒரு மனிதனின் கடைசி நிமிடங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது! இதைக் குறைந்தது மரணம் வரையிலாவது என்னால் சரிபார்க்க முடியாது. :-)

 
At 5:33 PM, Blogger Sanjeeth said...

நன்றி பெயரிலி.
இந்த கதையின் கருவை பல நூறு எழுத்தாளர்கள் பல்வேறு முறைகளில் கண்டிப்பாக கையாண்டிருப்பார்கள். கையாண்ட முறை வேறுபட வேண்டும்; என்னுடையது் வேறுபடுகிறதென்றே நம்புகிறேன். யோசித்துப் பார்த்தால், யாரும் கையாளாத கரு என்று ஒன்று இருக்க முடியுமா என்றே சந்தேகமாக இருக்கின்றது. இத்தனை வருடங்களில், எந்த கருவாக இருந்தாலும், எங்கோ ஒரு எழுத்தாளன் அதனைப் பற்றி கண்டிப்பாக (ஏதோ ஒரு மொழியில்) எழுதியிருப்பான் என்று நினைக்கிறேன். science fiction-கள் இதற்கு விதிவிலக்காக சொல்லலாம்!

 
At 5:46 PM, Blogger Sanjeeth said...

@sundar
"போஸ்ட் கார்ட்" நான் எழுதியதில் எனக்கு பிடித்த வரி :-)
விரோன் அவன் வாழ்க்கையின் "decision points"களை எண்ணிப் பார்க்கிறான். இதனை வைத்தே கதையை அமைத்திருக்கிறேன். அவைகளில் அந்த பஞ்சு மிட்டாய் சம்பவம் மிக முக்கியமானதென்பதால், அதனை தலைப்பாக வைத்துவிட்டேன்.

 
At 10:38 PM, Anonymous saravana raja said...

வடிவரீதியில் தொடர்ச்சியும், முழுமையும் உள்ளன.
ஆனால், உள்ளடக்கரீதியில் சே-யை இக் கதை இழிவுபடுத்துகிறது.
அதிலும் ரேயானுடனான உரையாடல் செயற்கையானது.
புரட்சியாளர்கள் குறித்த வழக்கமான நீரோப் பார்வையைத் தான் இக் கதை வெளிப்படுத்துகிறது.

 
At 11:47 PM, Blogger Srikanth said...

சஞ்சீத், கதையின் மொழியும், வடிவமைப்பும் நன்றாக இருந்தது.

கதையை இப்படியும் அமைத்திருக்கலாம்: முதல் காட்சியில் விரோன் கொல்லப்படுகிறார், இறக்கு முன் அவரது உதடுகள் 'பஞ்சு மிட்டாய்...' என்று சொல்கின்றன. சாவதற்கு முன் எதற்கு பஞ்சு மிட்டாய் கேட்டார் என்று ஒரு பத்திரிக்கையாளர் ஆராய்கிறார். கடைசியில் ரேயோனின் டயரி கிடைக்கிறது. முடிவில், ஒரு பஞ்சு மிட்டாயின் குளோசப்பைக் காட்டி Credits போடுகிறோம்...

எப்படி? :-)

 
At 12:21 AM, Blogger icarus prakash said...

சஞ்ஜீத் : வித்தியாசமான கதைக் கருவை, நவீனமான கட்டமைப்பில் எழுதியிருக்கிறீர்கள். படிக்க சுவாரசியமாய் இருந்தது. நன்றி.

பெயரிலி: முதலில் வந்த கதை எது?

ஸ்ரீகாந்த் : தமிழ்ச் சினிமா அதிகம் பார்க்காதீர்கள் :-)

 
At 9:50 AM, Blogger Sanjeeth said...

@சரவணா:
// வடிவரீதியில் தொடர்ச்சியும், முழுமையும் உள்ளன. //
நன்றி :)

//ஆனால், உள்ளடக்கரீதியில் சே-யை இக் கதை இழிவுபடுத்துகிறது. //
:-( கண்டிப்பாக இந்த நோக்கம் இல்லை. நான் செய்த தவறு சே போன்ற ஒரு படிமத்தை உபயோகப் படுத்தியதுதான். புரட்சியாளர்கள் என்ற சே அல்லது சே போன்ற ஒத்த கருத்துடையவர்களை குறிப்பிடுகின்றது என்று எதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ருவாண்டாவில் அத்துணை பேரையும் சர்வ சாதாரணமாகக் கொன்றுவிட்டு திரிந்தவர்களும் தன்னை புரட்சிக்காரர்கள் என்று தான் சொல்லிக் கொண்டனர். இங்கு என் நோக்கம் இவர்களை சே உடன் ஒப்பிடுவதில்லை . கதையில் விரோன் என்ன செய்கிறான், எதற்காக போராடுகிறான் என்று நான் கடைசி வரை சொல்லாமல் விட்டிருக்கிறேன். அதை தான் குறிப்பிட விரும்புகிறேன். ("Generalization" தவறு என்பது என் கருத்து, அதை நான் செய்யவும் இல்லை)

//அதிலும் ரேயானுடனான உரையாடல் செயற்கையானது.//
கண்டிப்பாக திருத்திக்கொள்கின்றேன்.... எதனால் என்று யோசிக்க வேண்டும்

// புரட்சியாளர்கள் குறித்த வழக்கமான நீரோப் பார்வையைத் தான் இக் கதை வெளிப்படுத்துகிறது. //
என்னைப் பொறுத்தமட்டில் அனைவருக்கும் - என்னை போன்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் முதல், நாட்டின் தலைவர்கள் வரை அனைவருக்கும் "தொலைந்த/தொலைத்துவிட்ட தருணங்களின்" ஏக்கம் கண்டிப்பாக இருக்கும். இதற்கு புரட்சியாளர்கள் விதிவிலக்கல்ல. இதனை மனித இயல்பாக உணர்கிறேன். இதனை முதலில் ஒரு மடத்தினை பீடாதிபதியாக வைத்து ஒரு satire எழுதாலாம் என்று தான் எண்ணி இருந்தேன் (பத்து பேருக்கு தயிர் சாத பாக்கெட் கொடுத்து ஆட்டோவில் ஏற்றி என் வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் ;) ). பின்பு இந்த "போஸ்ட் கார்ட்" என்னை மிகவும் பற்றிக் கொண்டது. அதற்கு ஒரு புரட்சியாளனாக (தன்னை எண்ணிக் கொள்ளும்) ஒரு நண்பர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன். உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும் :(.

 
At 9:53 AM, Blogger Sanjeeth said...

@ ஸ்ரீகாந்த் : // சாவதற்கு முன் எதற்கு பஞ்சு மிட்டாய் கேட்டார் என்று ஒரு பத்திரிக்கையாளர் ஆராய்கிறார் //
த, உ, சி (ROTFL)! கோலிவுட் அழைப்பது உங்களுக்கு கேட்கவில்லையா ? இரண்டு குத்து பாட்டு போட்டு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிடலாம் (Citizen Kane பாத்துட்டீங்களா ?)

@ பிரகாஷ் : உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி :).

 
At 10:14 AM, Blogger Ramya Nageswaran said...

சஞ்ஜித், வழக்கம் போல் வித்தியாசமான கரு + நடை. நன்றாக இருக்கிறது.

 
At 8:45 PM, Blogger Srikanth said...

//Citizen Kane பாத்துட்டீங்களா ?//

Of course, அதை வைத்துத் தான் எனது பின்னூட்டத்தை எழுதினேன்! :-)

எனக்கு சொந்தமாக ஒரு ஐடியா என்றாவது வந்ததென்றால், அனைவருக்கும் போஸ்ட் கார்டு அனுப்பித் தெரியப் படுத்துகிறேன்...

த,உ,சி - nice!

 
At 10:42 PM, Anonymous saravanaraja said...

சஞ்ஜித்...

உன்னுடைய தவறான படிமப் பயன்பாடு குறித்த கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். ருவாண்டாவில் தொடங்கி தமிழகத்து 'தமிழ் தீவிரவாதிகள்' வரை விரோன்கள் நிச்சயமாக உண்டு. இவர்களின் இறுதிக் கணங்கள் ஒரு வேளை இப்படி இருக்கலாம். ஒரு வேளை என்று குறிப்பிட காரணம் உண்டு. ஏனென்றால் பெரும்பாலும் விரோனுடைய குணாம்சங்களைப் பெற்றவர்கள் - conscious hypocrates - எவ்விதமான சிக்கலான வாழ்க்கையிலிருந்தும் மிக விரைவில் ஓடி விடுகிறார்கள்.

உன்னுடைய பதிலில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. விரோன் என்ன செய்கிறான், எதற்காகப் போராடுகிறான் என்பதை கூறாமல் விடுவது - நீ மறுத்திருந்தாலும் - Generalization ஆகத் தான் உள்ளது.

எனவே, நான் புண்பட்டேனா என்றால் ஆம், உண்மைதான். ஆனால் அது எனது ஆதர்ச நபரொருவரை தாக்கியதாக உணர்ந்ததால் மட்டும் அல்ல.

சே-யின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் இக்கதை சே-யின், பகத்சிங்கின், 1967 தொடங்கி இந்த ஜனநாயக சோசலிச நாட்டில் 'என்கெளண்டர்களில்' கொலை செய்யப்பட்ட எண்ணற்ற உண்மையான புரட்சியாளர்களின் இறுதிக் கணங்களை மனக் கண்ணில் எழுப்பியது. அவர்களில் ஒருவர் மிக சமீபத்தில் நீ வாழும் கர்நாடக மாநிலத்தில் கொலை செய்யப்பட்டார். அவருடைய இறுதிக் கணங்கள் எப்படி இருந்திருக்கும் என நீ எண்ணிப் பார்க்க விரும்பினால், இந்த link-ல் சென்று பார்.
http://bsaravanaraja.blogspirit.com/archive/2005/03/22/the_criminal_silence.html

 
At 4:24 PM, Blogger Sanjeeth said...

சரவணா,
சில கேள்விகள். ஒருவனின் சில நொடிகளின் (எதிர் மாறான) சிந்தனை , அவன் வாழ்க்கையை, அவன் சாதித்தவற்றை அர்த்தமற்றதாக்கிவிடுமா?
இவர்களை "conscious hypocrites" என்று சொல்வது எவ்விதத்தில் நியாயம்?
சிக்கல்களைக் கண்டு ஓடியவனாக இங்கு விரோனை நான் சித்தரிக்கவில்லை. விரோன் எதற்காக வாழ்ந்தானோ அதற்காக இறந்தான்.

>> நீ மறுத்திருந்தாலும் - >>Generalization ஆகத் தான் உள்ளது.
நான் "generalise" செய்யவில்லை என்பதைத் தான் நான் மறுபடியும் சொல்வேன்.இது ஒரு தனி மனிதனின் உணர்வுகள், எண்ணங்கள். நீ சொல்லி இருக்கும் எத்தனையோ புரட்சியாளர்களையும் நான் இங்கு விமர்சிக்கவில்லை. இதனை ஒரு விஞ்ஞானியையோ, ஒரு கலைஞனையோ, இல்லை ஒரு மதத் தலைவரையோ மையமாகக் கொண்டு எழுதி இருந்தால் உனக்கு இதே சிந்தனைகள் தோன்றி இருக்குமா?

(நாம் நேரில் பேசும் உரையாடலாக எடுத்துக் கொள்ளவும். :) )

 

Post a Comment

<< Home

Powered by Blogger