Wednesday, July 13, 2005

பேராசிரியர் நிறையின் வாழ்வில் சில உறைந்த கணங்கள்


நாற்பத்தி இரண்டாம் எண் கொண்ட அறை மருத்துவமனையில் மிகப் பிரபலம். அங்கு தான் நிறைக்கொண்டாருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.நான்கு வருடம் முன்பு வரை அவர் "நிறைக்கொண்டான்" என்றே அழைக்கப்பட்டு வந்தார்-இயற்பியல் துறையில் நோபல் பரிசு வாங்கும் வரை. நோபல் பரிசுடன் சில பட்டங்களும், சில அரசாங்க கௌரவிப்புகளும் கிடைத்தன. கூடவே அவர் பெயரின் கடைசி "ன்" "ர்" ஆக மாறியது.

நிறைக்கொண்டார் ரூபிக்ஸ் க்யூப் ஒன்றை கையில் வைத்து, கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். முப்பது வயதுள்ள வினய் அறைக்குள் நுழைந்தான்.

"Oh my God! இது உங்களுக்கு அலுக்கவே அலுக்காதா?" என்று சொல்லிக்கொண்டே க்யூபை அவர் கையில் இருந்து வாங்கினான். தரையில் விழுந்திருந்த சையின்ஸ் டுடே பத்திரிக்கையை எடுக்க குனிந்தான்.

"வினய், There is always another way"

வினய் எழுந்து தலையினை அசைத்துக் கொண்டே சிரித்தான். பத்திரிக்கையை பக்கத்திலிருந்த மேசை மீது வைத்தான்.

"அப்பா, இன்னைக்கு உங்களைப் பார்க்க யாரோ மந்திரி வராராம். அதெல்லாம் முடியாதுன்னு சொன்னேன். கேட்க மாட்டேங்குறாங்க. ப்ரெசுக்கு சொல்லியாச்சு, கான்செல் செய்ய முடியாதுன்னு வாதம் பண்றாங்க. I am fed up with these guys. ஆனா உங்கள தொந்தரவு செய்யக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அவங்களுக்குத் தேவை உங்களோட சேர்ந்து ஒரு ·போட்டோ! இதுல அந்த மந்திரி எனக்கு ·போன் செய்து பேசினார். அவர் நம்ம கம்யூனிட்டி ப்ரெசிடண்டாம். என்ன கம்யூனிட்டின்னு கூட எனக்குத் தெரில. தெரிஞ்சுக்கவே விருப்பம் இல்ல."

வினய் க்யூபை இடது கையினால் தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டிருந்தான். முப்பத்தி நான்கு முறை க்யூப் காற்றில் பயனித்து விட்டது. திடீரென்று, கை மாற்றிக் கொள்ளலாம் என்று வேகமாக வலது கைப் பக்கம் தூக்கி எறிந்தான்.

"வினய், எனக்கு அவர தெரியும். அவர் அப்பாதான் என்ன படிக்க வைத்தார். நல்ல மனிதர். நான் இந்த கம்யூனிட்டின்னு யாருக்கும் தெரியாது. பிரச்சனை என் பெயர் தான். இவங்க மட்டுமே வைக்கிற பெயர். There was a legend by that name. சுவாரசியமான விஷயம் பாரேன். அவர் போராடினது "அனைவரும் சமம், எல்லார்க்கும் எல்லாம்" என்ற கொள்கைக்காக! ஆனா இன்னும் அந்த கம்யூனிட்டி பெயர்ல ஒரு கட்சி. இப்போ அந்த மந்திரியோட அப்பா எனக்கு உதவி செய்த பத்திரிக்கைள வெளியிட்டு அவர் பெயர் வாங்கிடுவார். I dont mind. எனக்கு விளம்பரம் பிடிக்கும். சின்ன வயசுல உங்க சித்தப்பா அழகா இருக்கார்னு எல்லாரும் அவன கொஞ்சுவாங்க. அப்ப நான் கை கால்ல ஏதாவது அடி பட்டுட்டு வந்து நிப்பேன். என்னை எல்லாரும் கவனிக்கனும்" என்று சொல்லி கண் அடித்தார்.

"அப்பா! You are an eccentric b..". வினய் நிறுத்திக் கொண்டான்.

"ஏண்டா, இப்போ என்ன பார்க்க இத்தனை விசிட்டர்ஸ்? எனக்கு சாவு நெறுங்கிடுச்சா?"

இடது கையிலிருந்த எறிந்த க்யூப் இப்பொழுது வலது கையில் வந்து விழுந்தது. முப்பத்தி ஐந்து. அவருக்கு உலகம் மிக மெதுவாக இயங்குவது போல் தோன்றியது.

"அப்பா , நீங்க கவலைப் படாதீங்க. நான் பார்த்ததுக்கறேன்", என்று சொல்லிக் கொண்டே க்யூப்பை மெத்தை மேல் வைத்து அறையை விட்டு புறப்பட்டான்.

"நர்ஸ், நான்கு மணிக்கு கார்டூன் நெட்வர்க்கில் பேட் மேன் இருக்கிறது. மறந்துடாதீங்க. அப்பாவுக்கு கோபம் வரும்."

பாரதி அவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வந்த செவிலி; பொறுமையே உருவான மிக அழகிய பெண். மருத்துவமனையில் பேசப்படும் வம்புமொழிகளில் அதிகமாக இடம் பெறுவது இவள் தான். சமீபத்தில் ஒரு வாரவிடுமுறை எடுத்திருந்தாள்; ஒரு ஓவியனை மணம் செய்து கொண்டதாக இரண்டு நாட்கள் முன்பு உதவியாளர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். ஏதோ காரணத்தினால், இந்த செய்தி நிறைக்கொண்டாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மூன்று நாட்களாக அவள் ஊசி போடும் பொழுதெல்லாம் வலி வேறு. இன்று அவளைத் திட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார். திடீரென்று அவர் மனதில் ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. பாரதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பதிலுக்கு அதே எரிச்சலூட்டும் புன்னகை. சிரின்ஜினில் மருந்தெடுத்துக் கொண்டிருந்தாள். பாட்டில் கை நழுவியது.

நிறைக்கொண்டார் சட்டென்று எழுந்து அவள் அருகில் சென்றார். அவளை அருகில் இழுத்தார். பாரதி அவர் பிடியில் இருந்து விலக முயற்சித்தாள். அவருக்கு கோபம் தலைக்கேறியது. வலது கையினால் ஓங்கி அறைந்தார். அவள் நகர்ந்தாள். அவரது கட்டை விரல் நகம் அவள் நெற்றியின் வலது புறத்தில் பட்டது. சிறிய கீறல். லேசாக இரத்ததின் சுவடு. மூர்க்கமாக இழுத்து அவள் உதடுகளில் முத்தமிட்டார். பின், அவளை கோபமாகத் தள்ளிவிட்டு படுக்கைக்கு வந்தார்.

கை நழுவிய மருந்து பாட்டில் இப்பொழுது தரையில் பட்டு சிதறியது. மஞ்சள் துளிகள் அவள் வெள்ளை ஆடை முழுவதும் தெளித்தன. அவளை இன்னும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் முகத்தில் இன்னும் அந்த பொறுமை. அவள் ஆடையை சரி செய்து கொண்டிருந்தாள். ஒரு சிறிய முடிக் கற்றை நெற்றியின் வலது புறத்தை மறைத்திருந்தது. அவளது நிதானம் அவரை நிலைக்குலையச் செய்தது. அவருக்கு தன் மீது ஒரு அருவெறுப்பு எழுந்தது. பாரதி, வேறொரு பாட்டிலில் இருந்து மருந்தெடுத்து வந்தாள். ஊசி குத்திய போது அவருக்கு அதிகமாக வலித்தது.

கிளம்பும் பொழுது டி.வியை ஆன் செய்து, கார்டூன் நெட்வர்க் வைத்து விட்டுச் சென்றாள்.

அரை மணி நேரம் பேட்மேன் பார்ப்பதில் கழிந்தது. அறுபது வயதாகிய பேராசிரியர் இராமகிருஷ்ணன் அறைக்குள் நுழைந்தார். தலை முடியில் ஒரு கறுப்புக் கோடு மட்டும் இருந்தது.

"நிறை, How are you?"

ஒரு மெல்லிய புன்னகையுடன் தலையை மேலும் கீழும் அசைத்தார்.

"நேற்று ராமானுஜம் ஆடிட்டோரியமில் பேராசிரியர் ஹார்ட்டன் பேசினார். அதுக்குப் பிறகு ஒரு மணி நேர கலந்துரையாடல். Was very interesting. உனக்கு ஒரு கடிதம் கொடுக்கச் சொன்னார்," என்று சொல்லிவிட்டு தன் பையில் குனிந்து தேடினார்.

"ராம்கி. Do you know, I kissed that girl today. நெஜமா ராம்கி"

இராமகிருஷ்ணன் நிமிர்ந்தார். கடிதம் கிடைத்து விட்டது. "இதோ அந்த கடிதம்".

இராமகிருஷ்ணன் வேண்டுமென்றே தான் சொல்வதை அலட்சியம் படுத்துகிறார் என்று அவருக்கு கோபம் வந்தது.

"Interesting discussion நிறை. Waydord's conjecture-ஐ ஏன் சரி என்றோ தவறென்றோ நிரூபிக்க முடியாதுன்னு ஹார்ட்டன் விவரித்தார். மாரிக்கும் அவருக்கும் பெரிய விவாதம். சுவாரசியமா இருந்தது. We missed you நிறை. நிறை ஏன் என்னை அப்படி பாக்குற? உனக்கு ஏன் இப்படி வேர்க்கிறது? Are you all right? இரு ஏசியை வேகமாக்குகிறேன்"

இராமகிருஷ்ணன் ஏசி டாஸ்போர்ட் பக்கம் நடந்து சென்றார்.

"ராம்கி, Waydord's conjecture தப்புன்னு ரொம்ப சுலபமா நிரூபிச்சடலாம். ச்ச, எனக்கு இத்தனை நாள் ஏன் தோனாம போச்சு. So stupid of me. I am excited! ராம்கி, ஹார்ட்டன வர சொல்றியா? இதை வெளியிட்டே ஆகனும்".

இராமகிருஷ்ணன் ஏசியின் வேகத்தை கூட்டிவிட்டுத் திரும்பினார்.

"கடவுளே! நிறை! நர்ஸ்.நிறை நிக்கிறான்.. நடக்கறான்.. He is trying to say something....நர்ஸ்!"

"What the hell, ராம்கி! ஏன் நான் சொல்றத கேட்க மாட்டேங்கற?" என்று கத்தவேண்டும் என்று தோன்றியது. சந்தோஷமும் பரபரப்பும் கோபமும் சேர்ந்து அவர் வாய் அடைத்தது போல் இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"நிறை, உட்கார். You are not stable. அங்க போகாத. பால்கனி தடுப்பு சின்னது. நிறை. stop நிறை..நர்ஸ்! டாக்டர்..வினய்..நிறை..stop..hold the rail! நிறை!"

********

அடுத்த நாள், "காகித மலர்கள்" நாளிதழின் முதல் பக்கத்தில் ஒரு சிறிய கட்டத்தில் நிறைக்கொண்டாரைப் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது-
நோபல் லாரெட் நிறைக்கொண்டார் காலமானார். பிரபல பேராசிரியரும் நோபல் லாரெட்டுமான நிறைக்கொண்டார் நேற்று அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையின், மூன்றாவது மாடியில் உள்ள அவரது அறையில் இருந்து விழுந்து இறந்தார். அவருக்கு வயது 53. விபத்து நடந்த பொழுது அவருடன் பேராசிரியர் இராமகிருஷ்ணனும் அறையில் இருந்தார். இரண்டு வருடங்கள் முன்பு நடந்த விபத்தொன்றில் முதுகெலும்பு முறிந்து இரண்டு வருடங்களாக நகர இயலாமலும், பேச இயலாமலும் இருந்தார். அவரது கடைசி தருணங்களில் எழுந்து நின்று தடுமாறி நடந்ததாகவும், ஏதோ சொல்ல கடுமையாக முயற்சித்ததாகவும் இராமகிருஷ்ணன் அவரை விசாரித்த காவலாளர்களிடம் தெரிவித்தார்........................................................

Powered by Blogger