Thursday, August 11, 2005

என் பெயர் சித்ரா

chitra
ஆகஸ்ட் 13
என் பெயர் சித்ரா. இன்று என் பன்னிரெண்டாவது பிறந்த நாள். அண்ணன் இந்த டைரியை வாங்கித் தந்தான். இந்த டைரியில் தினம் நான் என்னைப் பற்றி எழுதப் போகிறேன். அண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவன் சென்னையில் டாக்ஸீ ஓட்டுகிறான். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை என்னை வந்து பார்ப்பான். அவன் டாக்ஸீயில் தான் வருவான். எனக்கு அவன் டாக்ஸீ பிடிக்காது, கருப்பு நிறம்.

ஆகஸ்ட் 14
அண்ணனுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை. அப்பா நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். எனக்கு அவரைப் பிடிக்காது. குடித்துவிட்டு அம்மாவை அடிப்பார். இன்றும் அடித்தார். அண்ணன் தடுத்தும் கேட்கவில்லை.அம்மா அழுது கொண்டே இருந்தாள். அண்ணன் மிகவும் கோபமாக டாக்ஸீ எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டான். அம்மா அவனுக்காக பாயாசம் செய்திருந்தாள். அவன் அதைக் குடிக்காமலே சென்றுவிட்டான். எனக்கு பாயாசம் பிடிக்காது. நான் கூழ் மட்டும் தான் குடிப்பேன்.

ஆகஸ்ட் 15
இன்றைக்கு பள்ளி விடுமுறை. காலையில் "குட்டி இராஜகுமாரி" படித்தேன்; அண்ணா வாங்கித் தந்தது. நான் அதை எட்டு முறை படித்து விட்டேன். அண்ணா தனியாக இருக்கும் போதெல்லாம் என்னை "குட்டி இராஜகுமாரி" என்று அழைப்பான். எனக்கு வெட்கமாக இருக்கும்.

அப்பா சாயங்காலம் சினிமா கொட்டகையில் "வெற்று பிம்பங்கள்" திரைப்படம் பார்ப்பதற்காக அம்மாவை கிளம்பச் சொன்னார். அம்மா, என்னையும் கூட்டிச் செல்லலாம் என்று கெஞ்சி சம்மதிக்க வைத்தாள். அப்பா வழக்கத்திற்கு மாறாக அவ்வளவாக கோபப் படவில்லை. கொட்டகைக்குள் அப்பா அம்மாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு கோபம் வரவில்லை, சிரித்துக்கொண்டே இருந்தாள். படம் நன்றாகவே இல்லை. படம் முழுக்க சண்டை;இரத்தம். ஏதோ குழந்தை பக்கத்தில் அசிங்கம் செய்துவிட்டது. நாற்றம் அடித்தது. நான் வீட்டுக்குப் போகலாம் என்று அழத் துவங்கி விட்டேன். அதிகமாகவே அழுதேன். மண்ணில் புரண்டு பாவாடை எல்லாம் ஒரே அழுக்கு. அம்மா என்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வேகமாக கிளம்பினாள். அப்பா வரவில்லை. கிளம்பும் முன் "சனியனை கூட்டி வர வேண்டாம்னு இதுக்குத் தான் சொன்னேன்" என்று கத்தினார். அப்பா என்னை "சனியன்" என்று தான் அழைப்பார்.

ஆகஸ்ட் 16
இன்று பள்ளியில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அறிவித்தனர். சரித்திரம், கணிதம், அறிவியல் மூன்றிலும் நல்ல மதிப்பெண்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் குறைவு. அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். இரவில் அப்பாவிடம் சாப்பிடும் போது சொன்னாள். அப்பா அவசரமாக "உம்" கொட்டினார்.

ஆகஸ்ட் 17
இன்று காயத்ரியை அடித்து விட்டேன். அவள் என் தோளில் கைப் போட்டாள். எனக்கு அது பிடிக்காது. ஷாரதா டீச்சர், என்னை மிகவும் கோபமாகத் திட்டினார். எனக்குக் கோபம் கோபமாக வந்தது. வீட்டிற்கு வந்த போது அம்மா குளித்து பொட்டெல்லாம் வைத்து அழகாக இருந்தாள். என்னிடம் "உனக்குத் தம்பி பாப்பா வரப் போறான்" என்று சொல்லி புன்னகைத்தாள். நான் என் பையை தூக்கி எறிந்து கொல்லையில் போய் ஓரமாக உட்கார்ந்துக் கொண்டேன். அம்மாவும் இன்று கோபப் பட்டாள். எனக்கு அழுகை வந்தது. விரல் நகத்தையும் சுற்றி இருந்த சதையையும் கடித்தேன். கோபம் வந்தால் இப்படித் தான் செய்வேன். கை எல்லாம் ஒரே இரத்தம். எனக்கு வலிக்கவே இல்லை. அம்மாவிடம் ஓடினேன். அம்மா பயந்துவிட்டாள். பத்தெல்லாம் வைத்து கட்டு போட்டு விட்டாள். அவளும் அழுதாள்.

ஆகஸ்ட் 18
இன்று பள்ளிக்குப் போகவில்லை. பாலம் உடைந்து விட்டதாம். 2கிமீ. சுற்றிக் கொண்டு தான் போக வேண்டும். எனக்கு அந்த பாதை பிடிக்காது.

இன்று நாள் பூராக படம் வரைந்தேன். அம்மாவின் படம் கூட வரைந்தேன். அம்மாவிடம் காட்டிய பொழுது என்னை அணைத்தாள். அம்மாவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கும் அவளைப் பிடிக்கும். ஆனால் சில சமயங்களிம் எனக்குப் பிடிக்காது. அவள் என்னை அணைத்துக் கொள்வாள். எனக்கு கோபம் வந்து அவளைத் தள்ளி விடுவேன். இன்றும் அப்படித் தான் செய்தேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

ஆகஸ்ட் 19
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே சண்டை. அப்பா குடித்து விட்டு வந்திருந்தார். அவருடன் வேறு யாரோ வந்திருந்தார். அம்மா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தாள். நான் அம்மாவின் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். "இந்த சனியன் நமக்கு வேண்டாமடீ" என்று என்னைப் பார்த்துக் கத்தினார். எனக்கு ஒன்றும் புரியவே இல்லை.

ஆகஸ்ட் 20
இன்றும் பள்ளிக்குப் போகவில்லை. பாலம் சரியாக இன்னும் 4 நாட்களாகும். நான் டைரியைப் படித்துக் கொண்டிருதேன். அம்மா என்னைப் பின்னால் இருந்து அணைத்தாள். எனக்குக் கோபம் வந்தது. ஆனால் அம்மா அழுது கொண்டிருந்தாள். எனக்கு பயமாக இருந்தது. "உனக்கு இனிமே இந்த டைரி, ஸ்கூலு எதுவும் கிடையாது சித்ரா. உங்கப்பன் உன் வாழ்க்கையே பாழாக்கப் போறான்.சண்டாளப் பாவி. அந்த பாவிமவன் உன்ன உங்க சித்தப்பன் கிட்ட அனுப்பப் போரானாம். 2000 ரூபாய்க்கு என் உசுரையே வித்துட்டான் . வேற எதாவது ஊருக்கு கூட்டிப் போய் உன்ன பிச்சை எடுக்க விட்டுடுவான்டீ அவன். உங்க அண்ணகிட்ட விட்டுடலாம்னாலும் கேட்க மாட்டேங்கிறான் இந்த மனுஷன். 2000 ரூபாய் அவனா தருவான் -ங்குறான் இந்த கிருக்கன்.உங்க அண்ணன் எங்குப் போய்த் தொலஞ்சானோ. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொன்னா இந்த ஆள் கேட்க மாட்டேங்குறான். நீ வேற அப்பப்போ ஏதாவது கிறுக்குத் தனம் பண்ணிட்டு வந்து நிக்கற. இங்கேந்து தப்பிச்சு போய்டு. எங்கேயாவது ஓடிப் போய்டுடீ." பிறகு ஏதொ கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி எங்கப்பாவையும் சித்தப்பாவையும் திட்டினார். நாளை என்னைக் கூட்டிச் சென்று விடுவார்களாம். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் கொல்லப் புறத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டே இருந்தேன். அம்மா அழுது கொண்டே வெளியே எங்கோ சென்றாள். எனக்கு அண்ணா ஞாபகம் வந்தது. நாளை முதல் நான் பிச்சை எடுக்கப் போகிறேன், அண்ணா.

இந்த டைரியை நான் கொல்லைப் புறத்தில் புதைக்கப் போகிறேன். இதில் கடைசிப் பக்கத்தில் என் அண்ணாவின் விலாசம் இருக்கிறது. யாராவது இதைப் பார்த்தாள் அவனிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் "குட்டி இராஜகுமாரி" படித்துவிட்டுத் தூங்கப் போகிறேன்.

ஆகஸ்ட் 21
அம்மா விஷத்தைக் குடித்துவிட்டாள். ஒரே அழுகைச் சத்தம். நானும் அழுதேன். அப்பா - "ரெண்டு உசுருடீ, இப்படி பழி வாங்கிட்டியே!" என்று அழுது கொண்டே அம்மாவின் நெஞ்சில் உதைத்தார். அம்மாவுக்கு வலித்திருக்காது. அப்பா என் தலையை சுவற்றில் மோதினார். எனக்கும் வலிக்கவில்லை. சித்தப்பாவும் அங்கிருந்தார். நான் கொல்லையில ஒளிந்து கொண்டேன். ஒரு மணி நேரம் கழித்து கார் சத்தம் கேட்டது. பிறகு அங்கேயே தூங்கிவிட்டேன்.

சாயங்காலம் அண்ணன் தான் என்னைத் தட்டி எழுப்பினான். அண்ணன் கண்ணெல்லாம் சிவந்திருந்தது. நான் அவனைப் பார்த்தவுடன் அழத் துவங்கிவிட்டேன். அவன் என்னை அவனுடன் கூட்டிச் செல்வதாகச் சொன்னான். எனக்கு ஒரே சந்தோஷம். அவனுக்கு டைரியைப் புதைத்த இடத்தை காண்பித்தேன். அவன் தோண்டி எடுத்தான்; டைரி முழுக்க மண். நான் எழுதியதை எல்லாம் அவனுக்குக் காட்டினேன். அவனுக்கு அப்பா மீது பயங்கரக் கோபம். அப்பாவை கண்ணத்தில் அறைந்தான். ரூபாய் நோட்டெல்லாம் அவர் முகத்தில் எரிந்தான். அப்பா அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணா என்னை அவன் டாக்ஸீயில் சென்னைக்குக் கூட்டி வந்துவிட்டான். எனக்கு சோகமாக இருக்கிறது. அண்ணன் தங்கி இருக்கும் அறை எங்கள் வீட்டை விடச் சிறியது.

ஆகஸ்ட் 22
அண்ணா என்னை டாக்டரிடம் கூட்டிச் சென்றான். எனக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என்றேன். அவன் கேட்கவே இல்லை. எனக்கு கோபம் வந்தது, அம்மா ஞாபகம் வந்தது.
எனக்கு டாக்டரை மிகவும் பிடித்திருந்தது. என்னைப் படமெல்லாம் வரையச் சொன்னார். நான் அண்ணாவை மொட்டையுடன் வரைந்தேன். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன். அப்பாவும் அண்ணனும் நேற்று மொட்டை அடித்திருந்தார்கள். திரும்பி போகும் வழியில் என்னை நாளை பள்ளியில் சேர்க்கப் போவதாகச் சொன்னான். நான் சந்தோஷத்தில் கத்தினேன். அண்ணன் சத்தமாக சிரித்தான்.

ஆகஸ்ட் 25
என் பள்ளியின் பெயர் "Leo Karner Institute for Children with Special Needs". இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண் தான்- ஜோசஃபீன். ஜோசஃபீனுக்கு இறுக அணைத்தால் பிடிக்கும். சந்திரா டீச்சர் அவள் அழும் போதெல்லாம் இறுக அணைத்துக் கொள்வார். நான் ஜோசஃபீன் அழுவது போல் படம் வரைந்தேன். அவளுக்கு கோபம் வந்து விட்டது. இங்கு நான் நிறைய படங்கள் வரைகிறேன். நான் நன்றாக வரைவதாக சந்திரா டீச்சர் சொல்கிறார். அண்ணனும் நான் பெரிய ஓவியனாக வருவேன் என்று சொல்கிறான். நான் வரைந்த படத்தை வரவேற்பரையில் மாட்டி உள்ளனர் - என் அம்மா எனக்கு ஊட்டி விடும் படம். படத்தின் ஓரத்தில் என் கையெழுத்து கூட இருக்கிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

-சஞ்சீத்

Related Article By Srikanth Meenakshi- http://kurangu.blogspot.com/2005/08/autism-3.html

Powered by Blogger