Monday, October 17, 2005

எனக்கு பிடித்த புத்தகங்கள் - I

J.D. Salinger's Catcher in the Rye

என்னை எது கொல்லும் என்றால் ஒரு புத்தகம் - அதனைப் படித்து முடித்தவுடன் அதன் ஆசிரியர் உன் நெருங்கிய நண்பன் போல் தோன்றும்; அவரிடம் எப்பொழுது வேண்டுமானாலும் ஃபோன் செய்து பேசலாம் என்று தோன்றும். ஆனால் அப்படி அடிக்கடி அமைவதில்லை.

("What really knocks me out is a book that, when you're all done reading it, you wish the author that wrote it was a terrific friend of yours and you could call him up on the phone whenever you felt like it. That doesn't happen much, though." )


Catcher In the Rye- யின் நாயகன் ஹோல்டன் கால்ஃபீல்டின் கருத்து இது. ஒரு வகையில் என் கருத்தும் கூட. இந்த புத்தகத்தைப் நான் முதன் முதலில் படித்த போது எனக்கு தோன்றிய பல வினோதமான சிந்தனைகளில் இதுவும் ஒன்று; அப்பொழுது எனக்கு வயது 18.

CITR ஒரு விசித்திரமான நாவல். 1945-46-இல் அமெரிக்காவில் வெளிவந்த இந்த நாவல் இன்றும் பதின்ம வயதினர் தளப்பங்களின் அடையாளமாக இருந்து வருகிறது. நாவல் முழுக்க ஒரு மெல்லிய சோகத்துடன் ஒரு விரக்தியான நகைச்சுவையின் இழை ஓடும். பல நேரங்களில் சிரிக்க வைத்து, கால்ஃபீல்டுடன் ஒரு பந்தத்தை உருவாக்கி, அவன் மேல் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி, அவன் செய்கைகள் யாவும் நியாமோ என சிந்திக்க வைத்து, நம்முடன் அவனை ஒப்பிடும் நிலைக்குத் தள்ளி, இந்த உலகத்தை விரக்தியுடனும், சந்தேகத்துடனும் பார்க்க வைத்து ஒரு விபரீத மன நிலையில் பல நாட்களுக்கு ஆழ்த்தி விடும். It is one of those dark novels, but a terrific one that!

முதன்முதலில் ஒரு தொடராக வெளிவந்த CITR, ஒழுக்கக் கோட்பாடுகளை மீறுவதாக (இன்றைய நிலையில் இவை திடுக்கிடும் வரம்பு மீறல்கள் என்று சொல்ல இயலாது.) பல குற்றச் சாட்டுகளுக்கு உள்ளாகி, பெரும் சர்ச்சைகளில் இன்றுவரை சிக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதன் கதை அமைப்பும், அதன் மொழி நடையும். இக்கதை முழுவதும் ஒரு முதல் நபர் விவரணை - கால்ஃபீல்ட் அவன் பார்வையில் உலகத்தை விவரிக்கிறான். கால்ஃபீல்ட் ஒரு சராசரி 16 வயது அமெரிக்கன். அவன் மொழி கொச்சையானது, கெட்ட வார்த்தைகள் நிறைந்தது, ஆனால் யதார்த்தமானது. சர்ச்சைகளுக்கு காரணமான இந்த மொழி நடையே இக்கதைக்கு ஒரு நம்பகத் தன்மையைத் தருவதுடன், கால்ஃபீல்டிற்கு ஒரு முழு உருவத்தைத் தருகின்றது.

கதையென்று பார்த்தால் மிக எளிமையான அமைப்பு. கதை என்னவென்று புத்தகம் படிக்கும் முன்னமே தெரிந்தாலும், வாசக அனுபவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாத முறையில் இருக்கும் கதை - கதை தெரிந்து படித்தாலும் எதிர்பாராமல் சிரிப்போம், புன்னகைப்போம், வருத்தப் படுவோம், கோபப்படுவோம். இருந்தாலும் ஒரு "spoiler warning" இங்கு இடுகிறேன் - கதைப் பற்றிய சில குறிப்புகள் இப்பத்தியில் உள்ளது. கால்ஃபீல்ட் பல தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் கடைசியாக அவன் பள்ளியில் இருந்து நீக்கப் படுகிறான். அங்கு துவங்குகிறது கதை. கால்ஃபீல்ட் அதற்கு முன்னமே பல முறை பல பள்ளிகளில் இருந்து நீக்கப் பட்டிருந்தான். அந்த நிலையில் அவன் பெற்றோரை சந்திக்கும் தைரியம் இல்லாமல், பள்ளியில் அவன் கடைசி நாளுக்கு மூன்று நாட்கள் முன்னரே பள்ளியிலிருந்து வெளியேறி சில நாட்கள் நியூ யார்க்கில் கழிக்க முடிவு செய்கிறான். அங்கு அவன் அனுபவங்களையும், அவன் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களைப் பற்றிய கருத்துக்களையும் கால்ஃபீல்ட் பகிர்ந்து கொள்கிறான்.

அவன் அவனது அனுபவங்களை விவரிக்க, மெதுவாக "கால்ஃபீல்ட்" என்ற ஆளுமை வாசகர் மனதில் உரு பெறுகிறது. அவன் உணர்வுகள் புரியத் துவங்குகிறது. அவனது குழப்பமான மனநிலை நமக்குத் தெளிவாகிறது. அந்த மூன்று நாட்களின் அவன் அனுபவங்கள் அவனை பெரும் மன உலைச்சலுக்கு ஆளாக்கி அவன் மேல் ஒரு பரிதாபம் கொள்ளச் செய்கிறது. அவன் அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில் இருப்பது போல் உணர்கிறான். அவனுக்குள் மனிதர்களின் போலித் தனம் ஒரு வெறுப்பை ஏற்படுத்துகிறது, முக்கியமாக குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்கள். குழந்தைகள் வளர வளர அவர்களது வெகுளித் தன்மைகளை இழந்து இந்த போலிச் சமூகத்தில் இழுத்துக் கொள்ளப் படுகிறார்கள் என்ற எண்ணம் அவன் மனதை வாட்டுகிறது. அவன் உலகையும், அவன் சந்திக்கும் மனிதர்களையும் விவரிக்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "phony" (போலியான). அந்த போலியான உலகத்தில் அவன் முழுமையாக நம்பும் ஒரே நபர் அவன் தங்கை ஃபிபீ(Phoebe). கால்ஃபீல்ட் என்ற கதாப்பாத்திரத்தின் அழகு அதன் முரண்பாடுகள் தான் - உதாரணத்திற்கு அவன் மொழியில் அதிக கெட்ட வார்த்தை இருக்கும்; ஆனால் அவன் தங்கையின் பள்ளியின் சுவரில் எழுதப் பட்டிருந்த அதே வாசகங்கள் கண்டு கோபப்படுவான். கால்ஃபீல்ட் ஒரு சிக்கலான, குழப்பமான கதாப்பாத்திரம். இருப்பினும் சாலிங்கர் அதை மிக அழகாக கையாண்டிருக்கிறார். சில இடங்களில் இத்தனை சிக்கலான கதாப்பாத்திரத்துடனும் ஒரு வாசகன் தன்னை ஒப்பிட்டு பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுவான்!

இந்த நாவலில் பல உருவகங்கள் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன. தலைப்பே ஒரு முக்கியமான உருவகம் தான். கால்ஃபீல்ட் ஒரு இடத்தில் தான் "Catcher in the Rye" ஆக ஆசைப்படுவதாக கூறுகிறான்.

What I have to do, I have to catch everybody if they start to go over the cliff- I mean if they're running and they don't look where they're going I have to come out from somewhere and catch them. That's all I'd do all day. I'd just be the catcher in the rye and all. I know it's crazy, but that's the only thing I'd really like to be. I know it's crazy.

அதாவது ஒரு மலை உச்சியில் உள்ள வயல் ஒன்றில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, எந்த குழந்தையும் உச்சியில் இருந்து கீழே விழாமல் அவர்களை பிடித்துக் கொள்பவனாக ஆக வேண்டும் என்கிறான். இதில் மலை உச்சியில் இழுந்து விழுவதென்பது ஒரு குழந்தை தன் வெகுளித் தனத்தை இழந்து "போலியான" உலகத்தில் விழுவதை குறிப்பிடுகிறது. அவன் குழந்தைகளை அவற்றில் இருந்து காக்க விரும்புகிறான். அவர்களது மழலைத் தனத்தை பராமரிக்க ஆசைப் படுகிறான். அவன் உலகத்தின் மேல் கொண்ட கண்ணோட்டத்தையும் அவன் மன நிலையையும் முழுமையாக விளக்கும் பகுதி இது தான்.

CITR-யில் எரிச்சலூட்டும் விஷயம் என்னவெனில், நாவலில் உள்ள இருள் மெதுவாக படிப்பவரையும் பற்றிக் கொள்ளும். ஒரு புதிய வாசக அனுபவத்தை தருவதுடன் ஒரு விரக்தியான மனநிலையில் ஆழ்த்தி விடக் கூடும். இந்த நாவலின் வெற்றிக்கும் சரி, இந்நாவல் நிராகரிப்படுவதற்கும் சரி, முக்கிய காரணம் இது தான். என் மேல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகளில் இதனை மிக முக்கியமானதாகச் சொல்வேன். கால்ஃபீல்ட் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் - It killed me, it really did.

oooOOOooo

CITR-ஐ நான் சமீபத்தில் மறுமுறை படிக்க நேர்ந்தது. இம்முறை ஏற்பட்ட அனுபவம் வேறு விதமாக இருந்தது. கால்ஃபீல்டுக்கும் எனக்கும் ஒரு பெரிய இடைவெளி இருப்பது போல் தோன்றியது. இருப்பினும் பிடித்திருந்தது. இதனை படிக்கும் பொழுது எனக்கு அடிக்கடி தோன்றிய சிந்தனை CITR தமிழில் அமைத்தால் எவ்வாறு இருக்கும் என்று. இதனை அப்படியே மொழிபெயர்ப்பதென்பது சாத்தியமாக தோன்றவில்லை. இது இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப் பட வேண்டும், அதே கருவுடன் ஒரு புதிய நாவலை எழுதுவது போல். CITR-ஐப் போல், இல்லை அதை விட சிறப்பாக அதனை அமைக்க முடியும்; ஏனென்றால் ஒரு சராசரி 16 வயது அமெரிக்கனைக் காட்டிலும் ஒரு 16 வயது இந்தியனுக்கு அவன் சமூகம் மீது ஏற்படும் கோபங்களும், வெறுப்புகளும் அதிகமானவை, சுவாரசியமானவை. இங்கு "phoniness" அதிகம்.

எனக்கு பிடித்த சில வரிகளை இங்கு நான் மொழி பெயர்த்திருக்கிறேன்/தமிழில் மாற்றி அமைத்திருக்கிறேன். நாவலில் உள்ள மெல்லிய (விரக்தியான) நகைச்சுவை இழை உங்களுக்குப் புரியும்.

கடவுள் சத்தியமாக நான் ஒரு கிறுக்கன்.
(I swear to God I'm a madman.)

நான் ஒரு அக்மார்க் அண்டப்புளுகன். நான் பத்திரிக்கை வாங்க கடைக்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது என்னை நிறுத்தி "எங்கே செல்கிறாய்?" என்று கேட்டுப் பாருங்கள், நான் நாடகம் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன் என்பேன். கொடுமை.
("I'm the most terrific liar you ever saw in your life. It's awful. If I'm on my way to the store to buy a magazine, even, and somebody asks me where I'm going, I'm liable to say I'm going to the opera.")

என்னிடம் பேசுவது மிகவும் கடினம். அது எனக்குத் தெரியும்.
(I'm very hard to talk to. I realize that.)


உருப்படாத திரைப்படங்கள். உன்னைக் கெடுத்துவிடும். நிஜமாகத் தான். நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை.
(The goddam movies. They can ruin you. I'm not kidding.)


இருந்தாலும், அணுகுண்டை கண்டு பிடித்தது எனக்கு ஒரு வகையில் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. இன்னும் ஒரு யுத்தம் நடந்தால், அதன் மேல் ஏறி உட்கார்ந்துக் கொள்ளப் போகிறேன். கண்டிப்பாக அதற்கு முன்வருவேன், கடவுள் சத்தியமாக.
(Anyway, I'm sort of glad they've got the atomic bomb invented. If there's ever another war, I'm going to sit right the hell on top of it. I'll volunteer for it, I swear to God I will.)



எனக்கு நிமோனியா வந்து இறந்தால் ஃபிபீ என்ன நினைப்பால் என்று யோசிக்கத் துவங்கினேன். குழந்தைத் தனமான சிந்தனை, இருந்தாலும் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அது போல் ஏதாவது நடந்தால், அவள் வருத்தப் படுவாள். அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். உண்மையாகவே. அந்த சிந்தனையை என் மனதில் இருந்து நீக்க முடியவில்லை;அதனால் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பேசாமல் நான் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் சென்று அவளை ஒரு முறை பார்த்துவிடப் போகிறேன், ஒரு வேளை நான் இறந்து போய்விட்டால்?
(I started thinking how old Phoebe would feel if I got pneumonia and died. It was a childish way to think, but I couldn't stop myself. She'd feel pretty bad if something like that happened. She likes me a lot. I mean she's quite fond of me. She really is. Anyway, I couldn't get that off my mind, so finally what I figured I'd do, I figured I'd better sneak home and see her, in case I died and all.)


oooOOOooo

CITR பற்றியும் சாலிங்கர் பற்றியும் சில சுவாரஸ்யமான செய்திகள்:
  • சாலிங்கர் எழுதிய ஒரே நாவல் இது.
  • பீட்டில் புகழ் ஜான் லெனனைக் கொன்ற மார்க் சாப்மன் கைதியான பொழுது இந்த புத்தகத்தை வைத்திருந்தான்.
  • சாலிங்கர் ஓனா ஓ நீலைக் (Oona O'Neill) காதலித்தார். ஆனால் அவர் எதிர்பாராத வண்ணம், ஓநீல் தன்னை விட பல வருடங்கள் வயதான சார்லி சாப்லினை மணம் செய்து கொண்டார்.
  • பப்லிஷர்ஸ் வீக்லியின் கணக்கெடுப்பின் படி CITR-இனை அதிகமாகப் படிப்பவர்கள் பெண்களே!
  • ஒவ்வொறு வருடமும் சுமார் CITR 250000 பிரதிகள் விற்கின்றன.
  • இரண்டாம் உலகப் போரில் நார்மண்டியைக் கைப்பற்றிய காலாட் படையில் சாலிங்கர் உறுப்பினராக இருந்தார்.

Powered by Blogger