Tuesday, June 29, 2004

சில நிமிடங்கள் ஆத்திகனாக

சில நேரங்களில் இறைவன் எனக்குத்தேவை - பழிக்கவும், சபிக்கவும். நான் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் அந்த வீட்டின் முன் நின்று, ஒரு சிரிப்புடன் அச்சிறுவனுக்கு கைகொடுத்து விட்டுத்தான் செல்வேன்.இன்றும் ஒரு நிமிடம் நிற்கிறேன். அவன் இல்லை. அவன் தந்தையிடம் பேசினேன். "இருந்தாலும் எங்களுக்கு முன்னாடியே அவன் போயிட்டான்னு ஒரு சின்ன சந்தோஷம். நாங்க போயிட்டா அவன் என்ன செய்வான்" என்று சொல்லி ஓவென்று கதறினார். இதே போல் என்றோ ஒரு நாள் வேறொருவர் சொல் கேட்ட ஞாபகம் ("என்னைப் போல பெத்தவங்க மட்டும்தாங்க எங்களுக்கு முன்னாடியே எங்க புள்ளைங்க செத்துடனும்ன்னு வேண்டிப்பாங்க"). அச்சிறுவன் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப் பட்டவன்.

இச்சம்பவம் எத்தனை நாள் என் மனதை பிசையும் என்று தெரியவில்லை. சொல்ல இயலாத வருத்தம், கோபமும் கூட. இந்த கோபம் யார் மீது என்று புரியவில்லை. என் கோபத்தை அர்த்தமற்றதாக ஆக்கிக்கொள்ளவும் விருப்பமில்லை.அதனால் இறைவனை நம்புகிறேன். இந்த பிரபஞ்சத்தின் சிற்பி அவனே என நம்புகிறேன். அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது என நம்புகிறேன். நான் அவன் கையிலோர் பொம்மை. என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கர்மவினைகளின் பிரதிபலிப்பு. அவ்வாறு இருக்க இறைவனே நீயும் இந்த கர்ம பலனை அனுபவிப்பாய். அந்த சிறுவனை கொன்ற பாவத்திற்காக. ஒரு வேளை, நீயும் மனநிலை பாதிக்கப்பட்டவனோ ?. அதனால் தான் இதைப் போன்ற படைப்புகளை படைக்கிறாயா ?

Monday, June 14, 2004

என் முதல் பதிவு

இதோ என் முதல் பதிவு,நான் சிந்திக்கும் மொழியிலே. இப்பதிவும் இனி வர இருக்கும் அனைத்துப் பதிவுகலும் என் நண்பன் சரவண ராஜாவுக்கே சமர்ப்பணம். ஐந்தே நிமிடங்களில் இம் மொழியின் மேல் காதல் உண்டாகச் செய்தவன்.REC திருச்சியில் நடைபெற்ற கவிதை போட்டியில் "எனக்கும் என் கவிதைக்கும் உள்ள உறவு" என்ற தலைப்பில் அவன் எழுதிய கவிதை எனை மிகவும் பாதித்தது. இன்றும் அந்த பாதிப்பு உள்ளது,அவன் எங்கு என்று தான் தெரியவில்லை! :(

Powered by Blogger