விடப்பட்ட வார்த்தைகள்
பாரதி திரைப்படத்தில் , நிற்பதுவே நடப்பதுவே என்று இளையராஜாவின் அற்புதமான இசையில், ஹரீஷ் ராகவேந்திராவின் குரலில், ஷாயாஜி ஷிண்டேவாக பாரதியாக சோலையிலும் அருவியிலும் நின்று மெய்மறந்து பாடுவார். (தயவு செய்து இந்த படத்துக்கு lyrics யாருன்னு கேட்டுடாதீங்க !!!) . பார்ப்பதெல்லாம் மாயை என்று எவ்வளவு அழகாக சொல்கிறார் என்று வியந்தேன், வியந்திருந்தேன். நேற்று சந்தோஷ் எனக்கு பரிசளித்த "பாரதியார் கவிதைகள்", புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த போது, திரைப்படத்தில் இடம்பெறாத கடைசி ஐந்து வரிகள் ஒரு இன்ப அதிர்ச்சியினை அளித்தது.
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லைகாண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்
காண்பதை அன்றி வேறொன்றும் இல்லை என்பதுதான் இப்பாடலின் முழு அர்த்தம். எனவே "காட்சிப் பிழை" என்று நம்பியவர்கள் திருத்திக்கொள்ளவும்.
"என்ன அய்யரே, தமிழ் சினிமால தான் இரண்டு மணி நேரம் எதாவது சொல்லிட்டு, கடைசில அரைமணி நேரம் அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்றாங்கோ, நீருமா ? " என்றெல்லாம் கேட்கக் கூடாது. தலைவர் சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்.